

திருச்சி: “தாமரை வளர்வது குளத்திலும் குட்டையிலும்தான். ஆனால், தமிழகம் ஒரு பெருங்கடல். இந்த தமிழ்க் கடலில் தாமரை மலர முடியாது” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
திருச்சி கன்டோன்மென்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு நவாப் நினைவு அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், அறக்கட்டளை மக்கள் தொடர்பு அலுவலர் பஷீர் அகமது, முஸ்லிம் இலக்கிய மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் சையது ஜாபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியது: “உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். புனித ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் இறைவனை வேண்டுவது உலக அமைதி நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான். உலக அரசியல் சூழ்நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
இன்று உலகம் மிகக் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உலக மக்களை பாதித்து வருகிறது. இந்தச் சூழலில் அனைத்து நாடுகளும் அமைதியை முன்னிறுத்த வேண்டும். உலகுக்கு இன்று தேவையானது போர் அல்ல, அமைதிதான்.
நேற்று வரை நான்கு முனைப் போட்டியாக இருந்த தேர்தல், தற்போது ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. புதிய கூட்டணிகள் உருவாவது ஜனநாயக நாட்டில் இயல்பான ஒன்றுதான். இன்னும் பலமுனை போட்டிகளாக கூட மாறலாம்.
யாரும் தேர்தலில் போட்டியிடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி மிகவும் வலிமையானது. ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியால் 80%-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
எந்த அளவுக்குப் போட்டி இருந்தாலும், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதிமுக கூட்டணி குறித்து அடிக்கடி டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால், இங்கு வந்து கூட்டணி குறித்து தெளிவாகப் பேசுவதில்லை. இது, தமிழக முதல்வர் கூறியதுபோல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையிலான போட்டியாக மாறி வருகிறது என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில் திராவிட சிந்தனை, தமிழ்ப் பண்பாடு வேரூன்றி உள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு இடமில்லை. தாமரை வளர்வது குளத்திலும் குட்டையிலும் தான். ஆனால் தமிழகம் ஒரு பெருங்கடல். இந்த தமிழ்க் கடலில் தாமரை மலர முடியாது” என்றார்.