

‘இந்து தமிழ் திசை' பதிப்பக வெளியீட்டில் சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானெக் ஷா எழுதிய ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற நூலை, சென்னையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். உடன், நீதிபதி சி.சரவணன், நூலாசிரியர் ஒய்.ஆர்.மானெக் ஷா. படம்: ம.பிரபு
சென்னை: இன்றைய அறிவியல், கணினி யுகம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத அற்புதங்களை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு சித்த மருத்துவமாக சித்தர்கள் அருளிவிட்டு சென்றுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பெருமிதம் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ பதிப்பக வெளியீட்டில் சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானெக் ஷா எழுதிய ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சித்த மருத்துவ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் வரவேற்றார். நூலை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, அந்த நூலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். நீதிபதி சி.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்வில் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: உலகில் அறிவு சார்ந்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தமிழ் மண்தான், இயற்கையோடு இயைந்த வாழ்வை பதிவு செய்து இருக்கிறது. இன்றைய நவீன அறிவியல், கணினி யுகம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பல அற்புதங்களை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் நமக்கு சித்த மருத்துவமாக அருளிவிட்டுச் சென்றுள்ளனர். உடம்பையும், உள்ளத்தையும் வைத்து திருமூலர் பாடிய பாடல்கள்தான் தமிழ் மருத்துவத்தின் அடிநாதம்.
மக்களோடு, மக்களாக வாழ்ந்த அகத்தியர், போகர் போன்ற பல சித்தர்கள் ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் எழுதி வைத்துச்சென்ற குறிப்புகள் உலகத்தவர்களை வியக்க வைத்துள்ளது. பார்கின்சன் நோய்க்கு தூதுவளையின் அடிப்பகுதி வேரை வெயில் படாமல் உலர்த்தி பசுநெய் விட்டு குலைத்து சிறு, சிறு உருண்டைகளாக 48 நாள் சாப்பிட்டால் பார்க்கின்சன் நோய் அணுகாது என 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ குறிப்பு நம்மிடம் உள்ளது. உன்னதமான வாழ்க்கையை அறச்சிந்தனையின் வாயிலாக வாழ வேண்டிய விதத்தில் வாழ்ந்தால் என்றும் இளமையாக வாழலாம். இவ்வாறு பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேசும்போது, “சித்த மருத்துவத்தின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். சித்த மருத்துவம் நமது வாழ்வியல் நெறி. நீண்ட கால பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவம் தான் நிரந்தர தீர்வு. பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் சித்த மருத்துவம் குறி்த்து இதுபோன்ற விழிப்புணர்வு நூல்கள் தீர்வாக அமையும், என்றார்.
இறுதியாக நூலாசிரியர் டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா ஏற்புரை நிகழ்த்தினார். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சித்த மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விழாவில் கற்பகவள்ளி சிவக்குமார் தொகுத்து வழங்க, தூத்துக்குடி சகாயராஜ் நன்றி கூறினார்.