

சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவின்போது பதிப்பகங்களில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். | படம்:எஸ். சத்தியசீலன் |
சென்னை: புத்தகங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்படுத்தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவுவிழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் ஆயிரம் அரங்குகள் இடம்பெற்ற இந்த புத்தக காட்சியை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
புத்தக காட்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசியதாவது: மொழி, கலாச்சாரம், சிந்தனை இவை அனைத்தும் நமது முன்னோர்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்த்தவை. தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டு பழமையான மூத்த மொழி. ஞானத்தை வாரி வழங்கிய மொழி. பழந்தமிழ் படைப்புகள் தமிழின் உன்னதத்தை எடுத்துக்காட்டுகின்றன.
தமிழில் கோடிக்கணக்கான படைப்புகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது திருக்குறள், அடுத்தது கம்பராமாயணம் என்கிறார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. தொல்காப்பியம் வெறும் தமிழ் இலக்கண நூல் அல்ல, அது தமிழ் மண்ணின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல். தமிழ் ஏன் சிறந்த மொழி, அதை ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்கும் தமிழில் இலக்கியங்களில் காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதில் அறிவின் உச்சத்தை காணலாம். இன்றைய இயந்திர உலகில், தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதுதான் இன்றைய அடிப்படை தேவை. அறிவியல், மருத்துவம், தத்துவம்என அனைத்து துறைகள் குறித்தும் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ் படைப்புகளை தேடிப் பிடித்து நமக்கு பதிப்பித்து தருகிறார்கள் பதிப்பகத்தினர். பதிப்பக பணி ஓர் உன்னதமாக பணி. புத்தகங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும். புத்தகத்தை தலை குனித்து படித்தால் அது நம்மை தலை உயர்த்தச் செய்யும். தொடர் வாசிப்பு அறிவை அகலப்படுத்தும். புத்தகங்களை நேசித்தலும், அவற்றை சிறிது நேரத்தை செலவிடுதலும் நம்மை மேலும் உணர்த்தும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றுப் பேசினார். நிறைவாக செயலாளர் எஸ்.வயிரவன் நன்றி கூறினார். விழாவில் எழுத்தாளர்கள், புத்தக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.