

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் 8 சிறப்பு நீதிமன்றங்கள், சீனியர் சிவில் நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதையடுத்து அந்த 8 நீதிமன்றங்களுக்கும் மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி டாக்டர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய ஆர்.விவேகானந்தன் - கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், ராமநாதபுரம் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பி.சாந்தி - திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், மதுரை 3-வது கூடுதல் தீண்டாமை ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஜோசப் ஜாய் - மதுரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், அரியலூர் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி என்.ராம் - விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், சேலம் வணிக நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஆர். தோத்திரமேரி - சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், சிவகங்கை மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி வி.ராமலிங்கம் - சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், திருநெல்வேலி 2-வது கூடுதல் தீண்டாமை ஒழிப்பு அமர்வு நீதிபதி எஸ்.ஹேமா - திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தென்காசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு, தென்காசியில் கூடுதல் அமர்வு நீதிபதியாகப் பணிபுரிந்த எஸ்.மனோஜ்குமார் - மாவட்ட அமர்வு நீதிபதியாகவும், தென்காசி புதிய எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்துக்கு தூத்துக்குடியில் பணியாற்றிய அமர்வு நீதிபதி பி.வி.வஷீத்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.