

அண்ணாமலை | கோப்புப் படம்
சென்னை: "2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை. இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177-ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. இதுவரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100-ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தகுதித் தேர்வுக்குப் பின்னரும் மற்றொரு போட்டித் தேர்வு நடத்தும் அரசாணை 149-ஐ கைவிட்டு, 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், அவர்கள் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு எங்கள் ஆதரவை வெளிப்படுத்தினோம். தொடர்ந்து தமிழக பாஜக, அவர்கள் கோரிக்கைகளுக்குத் துணை நிற்கும்.
போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.