மேகேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு ஐஜேகே வலியுறுத்தல்

கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி

கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் மேகேதாட்டு அணை முயற்சியை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி, வலுவான அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

மேகேதாட்டு அணை அமையவுள்ள பகுதியை மத்திய நீர் ஆணையக் குழு நேரில் பார்வையிட்டுள்ளதாகவும், அங்கு தேக்கப்படும் தண்ணீரை பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது என்பதை அக்குழு புரிந்துகொண்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே இயல்பாகவே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நீர் ஆணையத்திடம் மேகேதாட்டு திட்டத்துக்கான விரைவான மதிப்பீடு மற்றும் அனுமதியையும் கர்நாடக அரசு கோரியுள்ளது ஏற்புடையதல்ல. குடிநீருக்காக மட்டுமே அணை கட்டுகிறோம், தமிழகத்தின் அச்சம் தேவையற்றது என்று கூறுவதால் தமிழகத்தின் நியாயமான கவலைகளை புறந்தள்ளிவிட முடியாது.

காவிரி என்பது இரு மாநிலங்களுக்கும் தொடர்புடைய மாநிலங்களுக்கு இடையேயான நதி. அதன் நீரோட்டத்தில் ஏற்படும் எந்த முக்கிய மாற்றமும் கீழ்ப்பாசன மாநிலமான தமிழகத்தின் விவசாயம், குடிநீர் மற்றும் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.

ரூ.16,745 கோடி மதிப்பிலான மேகேதாட்டு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருவதும் ஏற்புடையதல்ல.

அது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான மேகேதாட்டு திட்டத்துக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசும் இந்த விவகாரத்தை மிகுந்த விழிப்புடன் அணுகி, சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தமிழகத்தின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, வலுவான அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கொடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி</p></div>
பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in