புதுச்சேரி ஜிப்மரில் ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு வெற்றிகரமாக சிகிச்சை

புதுச்சேரி ஜிப்மரில் ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு வெற்றிகரமாக சிகிச்சை
Updated on: 
1 min read

புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வெற்றிகரமாக ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை அளித்து நலமுடன் வீடு திரும்ப உதவியுள்ளனர். மேலும், ஓராண்டுக்கு மேல் சிகிச்சை முற்றிலும் இலவசமாக தரப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தைக்கு ஏற்பட்ட மெடுல்லோ பிளாஸ்டோமா (Medulloblastoma) எனும் வீரியமிக்க மூளைக் கட்டிக்கு, பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் ஜிப்மர் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்துள்ளது. இக்குழந்தை சிறப்பு சிகிச்சைக்காக 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் ஜிப்மருக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

முதலில் கட்டியை முழுமையாக அகற்றினர். தொடர்ந்து, குழந்தை புற்றுநோயியல் தொடங்கி பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மெடுல்லோ பிளாஸ்டோமா சிகிச்சையில் கதிர்வீச்சு சிகிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், மிக இளம் வயதுடைய குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிப் பருவத்தில் கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது, அறிவாற்றல் திறன் மற்றும் வளர்ச்சிப் பாதிப்புகள் உள்ளிட்ட நீண்டகால பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தையின் மிகக் குறைந்த வயதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், கதிர்வீச்சு சிகிச்சை அளிக்காமல் சிகிச்சை மேற்கொள்ளும் அணுகுமுறையை மருத்துவக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இதன்படி, குழந்தைக்குத் தொடர்ந்து 12 மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இக்குழந்தைக்கு ஜிப்மரில் கடந்த செப்டம்பர் 20-ல் தன்னுடல் சார்ந்த ரத்த உருவாக்கும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறிய குழந்தை, கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி தனது சொந்த ஊருக்குச் சென்றது.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, குழந்தைக்கு நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை. இந்தச் சாதனையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், ஓராண்டுக்கும் மேலாக நீடித்த அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட முழுமையான சிகிச்சையும் குழந்தையின் குடும்பத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டதாகும். பிரதமர் நிவாரண நிதி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இது சாத்தியமானது.

புதுச்சேரி ஜிப்மரில் ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு வெற்றிகரமாக சிகிச்சை
“சாதிவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவோம்”- அன்புமணி

X