‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகி உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி சென்சார் போர்டு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகி உள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்ப பெற உள்ளதாக கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு, தனி நீதிபதி ஆஷா முன் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in