‘ஜல்லிக்கட்டு விதிகளில் தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வாக்கு அரசியல்’

ஜல்லிக்கட்டு ராஜேஷ் குற்றச்சாட்டு
தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மாநிலத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்

தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மாநிலத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்

Updated on
2 min read

திருச்சி: “ஜல்லிக்கட்டு விதிகளில் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் வாக்கு அரசியலுக்காகவே” என தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மாநிலத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மாநிலத் தலைவரும், நாதக மாநில நிர்வாகியுமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெரும் சிக்கலான ஆன்லைன் டோக்கன் முறை ரத்து, மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வசதி தேவை இல்லை, ஜல்லிக்கட்டு நடத்தும் விழா கமிட்டியினருக்கு முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி பத்திரம் ரத்து, இந்த அறிவிப்பினை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பிறகுதான் இந்த அறிவிப்பு வந்தது. அப்போது, மாடுபிடி வீரர்களுக்கு கால்நடைத் துறையில் அரசு வேலை தருவதாகவும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர சிகிச்சை மையம், பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டது. இன்னும் 2 மாதம்தான் இருக்கிறது. இந்த 2 மாதத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள். திரும்ப ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். தேர்தல் வருவதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செயல்படுத்த முடியாத விஷயத்தை எப்படி நடைமுறைப்படத்த முடியும்? கடந்த தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை அது நிறைவேற்றவில்லை.

ஜல்லிக்கட்டை அரசு போட்டியாக மட்டுமே பார்க்கிறது. கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க எவ்வளவு போராட்டம் நடத்தினோம் என்பது எங்களுக்குத் தான் தெரியும். இதற்கு நன்றி தெரிவிக்கும் பல அமைப்புகள், ஏன் ரூ.1,000 பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் முழுக்க முழுக்க அரசியல் மட்டும் தான் இருக்கிறது. நல்ல நோக்கம் இருந்தால் தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பு முதல்வர் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் இத்தனை ஆண்டுகளாக இதை செய்யவில்லை?

காளைக்கு ரூ.1,000 தரப்பேவாத கூறியதால் தான் மாடு வளர்ப்போர் 2021-ல் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. நிதிசுமை காரணமாக செய்யவில்லை. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ரூ.1,000 தருவோம் என அலங்காநல்லூரில் முதல்வர் உத்தரவாதம் தந்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நலன் கருதி முதல்வர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முதல்வரின் அறிவிப்புகள் அனைத்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக கொடுத்த வாக்குறுதியேத் தவிர வேறு எதுவும் இல்லை.

ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் கமிட்டியினருக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தங்களுக்கு 25 முதல் 30 டோக்கன் வாங்கிச் சென்று விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆன்லைன் டோக்கனில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அமைச்சர்கள் சொல்பவர்களுக்குத் தான் டோக்கன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் தான் அதிகளவு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுத்தவிர வேறு எங்கும் நடந்தது கிடையாது. திருச்சி மாவட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தொகுதியான திருவெறும்பூரில் கிளியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கேட்டு கடிதம் கொடுத்தேன். இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்ததாக ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள் என்கின்றனர்.

இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியே நடைபெறாத கோயம்புத்தூர், கரூர், ஈரோட்டில் எப்படி அனுமதி கொடுத்தார்கள். எஸ்பி வேலுமணி, செந்தில்பாலஜி, முத்துசாமி ஆகியோர் தலையீட்டால் அங்கு நடக்கிறது. கிளியூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து முறையிட உள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளேன். அதிகாரிகள், அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்துகின்றனர்.

பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடந்த ஊர்களை கணக்கெடுத்து ஆவணங்கள் கேட்காமல் அவற்றை அரசாணையில் சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு நல வாரியம் அமைக்க வேண்டும்.

காளைக்கு ரூ.1,000 அறிவிப்பு என்னாச்சு? மாடுபிடி வீரர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு தருவார்கள்? இதையெல்லாம் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை திமுக அரசு தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஜல்லிக்கட்டு வீரர்கள், மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மாநிலத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் </p></div>
‘தேர்தலில் பெண்களுக்கு அதிக சீட்’ - புதுச்சேரியில் காங்கிரஸ் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in