அலங்காநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 2 அறிவிப்புகள் - மாடுபிடி வீரர்கள் வரவேற்பு

‘முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை’
மாடுபிடி வீரர்கள்

மாடுபிடி வீரர்கள்

Updated on
2 min read

மதுரை: ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாடுபிடி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை இன்று பார்வையிட வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை, அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் காளைகளுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என 2 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அப்போது அவர் பேசியது: “மதுரை என்பது, வீரம் விளைந்த மண். இந்த மண்ணில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்திருக்கேன். தமிழர்களின் அடையாளமான இந்த வீரவிளையாட்டுக்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும்’, சங்கம் வளர்த்த மதுரையின் அறிவு வளர்ச்சிக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகமும்’ கட்டிக் கொடுத்திருக்கோம். இன்றைக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்கும் நேரத்தில், காளைகளுக்காகவும் காளையர்களுக்காகவும் 2 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு பணியமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறப்பு உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

மாடுபிடி வீரர்களின் பல ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாடுபிடி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாடுபிடி வீரர் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர் கூறுகையில், “ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். புகழ் பெற்றதால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரபலமாக தெரியும். வெளியில் தெரியாமல் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். படிக்காதவர்கள் மட்டும்தான் மாடுபிடி வீரர்களாக உள்ளனர் என பொதுவாக நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும்.

தற்போது பலர் பட்டப்படிப்பு படித்து விட்டும் மாடுபிடிக்கும் வீரச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொதுவாக மாடுபிடி வீரராக இருப்பதை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. எந்த வேலைக்கு போகாமல் இப்படி வீணாக மாடுபிடி வீரனாக இருக்கிறானே என பெற்றோரும் எங்களைப் பற்றி கவலைப்படுவார்கள். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் பெற்றோரும் எங்களைப் பற்றி பெருமையாக கருதுவார்கள். மாடுபிடி வீரராக இருப்பதை ஊக்குவிப்பார்கள்.

நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். காளைகள் வளர்ப்போருரை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதல்வர் அறிவித்த மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

மாடுபிடி வீரர் சின்ன இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நதீன்குமார் கூறுகையில், “நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ளேன்.

விவசாய வேலைதான் பார்த்து வருகிறேன். அதோடு காளைகளையும் வளர்த்து மாடுபிடி வீரராக இருந்து வருகிறேன். மாடுபிடி வீரராக பயிற்சி பெற்று வருகிறேன். பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறேன்.

இருந்தாலும் எனது பெற்றோர், உறவினர்கள் எல்லாம் மாடுபிடி வீரராக இருப்பதை ஏற்பதில்லை. தற்போது தமிழக முதல்வர் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக இளைஞர்கள் முன்வருவதற்கு தமிழக முதல்வரின் அறிவிப்பு ஊக்கமளிக்கும்” என்றார்.

<div class="paragraphs"><p>மாடுபிடி வீரர்கள்</p></div>
“நிர்வாகத் திறமை இருந்தால் கடன் சுமையை சமாளிக்கலாம்” - இபிஎஸ் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in