பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன.6 முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவ.18-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்த பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது,“திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரச்சார இயக்கமும், டிச.13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாநிலை போராட்டமும் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து டிச.27-ல் மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடும் அதன் தொடர்ச்சியாக ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும்” என்றார்.
