

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “23 ஆண்டு கால போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடியலை தரக்கூடிய விடியல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஜனவரி 6 முதல் நடைபெற இருந்தப் போராட்டம், முதல்வரின் அறிவிப்பை அடுத்து ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு விதிமுறைகளை வெளியிட்ட பிறகு, அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடுவோம். நாங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக பணி நிறைவு பெறக்கூடிய அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு 50% ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். முதல்வரின் இத்தகைய முடிவுகளை வரவேற்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் முதல்வர் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்றுவார் என நம்புகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
TAPS: புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள் என்னென்ன?
1) மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50%-க்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
2) 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
3) ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
4) அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
5) புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
6) பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.