

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து நவ.5-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்பட முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் 2-ம் வகுப்பு தூங்கும் பெட்டிகளில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
தீபாவளி பண்டிகை வரும் நவ.8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்தவகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, நவ.5-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவுமுடிந்து அடுத்தடுத்து 5 நிமிடங்களில் காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு முறையே புறப்படும் பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய ரயில்களில் விரைவு ரயில்களின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
குறிப்பாக, பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி (தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில்) ஆகிய விரைவுரயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, “ரெக்ரெட்” என்று வந்தது.
இதுபோல, மத்திய மாவட்டங்களுக்கு புறப்படும் மலைக்கோட்டை, மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. முக்கிய ரயில்களில் ஏசி பெட்டிகளிலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.
பகல் நேரத்தில் திருச்சி, மதுரைக்கு முறையே புறப்படும் சோழன், வைகை ஆகியவிரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு சிட்டிங் இடங்கள் நிறைவடைந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது.
அதேநேரத்தில், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில், கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரயில், கோவை இன்டர் சிட்டி ரயில்களில் சில இடங்கள் இருந்தன.
இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஐஆர்டிசிடி இணையதளம் மூலமாக, நேற்று காலை டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இணையதளத்தில் காலை 9.30 மணி வரை உள்ளே சென்று முன்பதிவு செய்யவே முடியாத நிலை ஏற்பட்டதாகவும், காலை 8 மணிக்கே சர்வர் முடங்கி விட்டதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.