

எம்எல்ஏ ஷாஜகான்
சென்னை: ஐயுஎம்எல் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள ஐயூஎம்எல் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பான அவசரக் கூட்டத்தில், தவெக அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இடம்பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கட்சிக்கு தற்போது 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக ஒருவரை அமைச்சரவைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏஷாஜகான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும். தவெக அமைச்சரவையில் பங்கேற்றாலும், திமுகவுடன் என்றும் உற்ற தோழனாக இருப்போம்; எங்களின் தேர்தல் கூட்டணி திமுகவுடன் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று பதவியேற்பு கூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசிய காதர் மொய்தீன், ஷாஜகானை அமைச்சரவைக்கு அனுப்பும் கட்சியின் முடிவை தெரிவித்தார்.
அதன்படி, ஷாஜகான் இன்று அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.