பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல: உயர் நீதிமன்றம்

பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல. இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா 13.08.2025 அன்று நடந்தது.

இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீன் ராஜன் என்பவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, துணை வேந்தரிடம் இருந்து பட்டம் பெற்றார்.

பல்கலை. சட்டப்படி வேந்தர் தான் பல்கலை. தலைவர். வேந்தர் இல்லாதபோது தான் துணை வேந்தர் பட்டங்களை வழங்க முடியும். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது சட்ட மீறல் ஆகும்.

பட்டம் பெற மறுத்தது தொடர்பாக அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறியபோது, தமிழகத்துக்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும் எனக் கூறினார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல. எனவே அந்த மாணவி துணை வேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, பட்டத்தை ரத்து செய்தும், அதுவரை பட்டத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற பட்டியலில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள், ‘பல்கலை. பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும். இது தொடர்பாக இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும். பல்கலைக்கழக விதிப்படி மாணவியை போல் செயல்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில் மனு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை டிச.18-க்கு தள்ளிவைத்தனர்.

பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல: உயர் நீதிமன்றம்
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க ஐகோர்ட் மறுப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in