“தமிழக கடன் குறித்து தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது” - தங்கம் தென்னரசு

“தமிழக கடன் குறித்து தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது” - தங்கம் தென்னரசு
Updated on
1 min read

சென்னை: “மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து சாதாரண அடிப்படைப் புரிதலும் இல்லாமலும், ‘பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க’ என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் ஆகும்” என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கனவும் ஆகும்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக கடந்த 10-ம் தேதி ஜோசப் விஜய் பதவியேற்றார். அவர், தனது முதல் உரையிலேயே தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாக குறைகூறினார். தொடர்ந்து தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவும் அவ்வாறே பேசியிருப்பது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

“தமிழக கடன் குறித்து தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது” - தங்கம் தென்னரசு
“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும்” - தவெகவுக்கு டிடிவி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in