

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் பங்கு பெறும் பொதுக்கூட்ட பாஸ் விற்பனையானதாக புகார் எழுந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதை மறுத்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதில், பங்கேற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி போலீசார் விதித்துள்ளனர். இதன் காரணமாக, புதுவையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என நிர்வாகிகள் மூலம் கியூ ஆர் கோடுடன் பாஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாஸ் நேற்று இரவுதான் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் படத்துக்கான பிளாக் டிக்கெட் போல கியூஆர்கோடு பாஸ் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. நேற்று இரவு ரூ.500-க்கு சிலர் பாசை விற்றுள்ளனர். இன்று காலை தொகையை அதிகரித்து ரூ 1000ம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் சிலர் பாஸ் ரூ.1000 என கூறினர். சிலர் அந்த பாஸை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது, "பாஸ் யாருக்கும் விற்பனை செய்யவில்லை. கட்சி நிர்வாகிகள் மூலம் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும்தான் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.