

காரைக்கால்: தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சேர்ந்துள்ளது தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா ஆகியோரும் அக்கட்சியில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவான பி.ஆர்.சிவாவும் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் கடந்த தேர்தலில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
அதேபோலவே வரும் தேர்தலிலும் இத்தொகுதி பாஜகவுக்கே ஒதுக்கப்படும் என்பதும், கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த, தற்போது நியமன எம்எல்ஏவாகவும், பாஜக மாநில துணைத் தலைவர் பொறுப்பிலும் உள்ள தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மீண்டும் போட்டியிடவுள்ளார் என்பதும் பெரும்பாலும் முடிவு செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
அதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஆர்.சிவா என்ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்பதாலும், தவெகவுக்கு தாவும் நோக்கில் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்துடன் பி.ஆர்.சிவா இருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து ஆனந்தை சந்தித்து விருப்பம் தெரிவித்து விட்டதாகவும், விஜய் முன்னிலையில் விரைவில் தவெகவில் இணைய உள்ளார் என்றும் தகவல் கசியவிடப்பட்டது.
இதுகுறித்து பி.ஆர்.சிவாவிடம் கேட்டபோது, ‘‘அது பழைய புகைப்படம். தற்போது வரை தவெகவில் இணைவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை’’ என்றார். எனினும் முதல்வர் ரங்கசாமி எடுக்கும் முடிவை பொறுத்தே சிவாவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.