“கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்று கொள்ளை அடிப்பதா?” - உதயநிதி

உதயநிதி

உதயநிதி

Updated on: 
1 min read

சென்னை: ‘மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் டம்மி சிஎம் சொன்ன மாற்றமா?’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.

கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த எம்.எல்.ஏ.

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்?

த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>உதயநிதி </p></div>
“கார்ப்பரேட்களுக்கு நன்றியோடு இருக்கிறது தவெக அரசு” - டி.ஆர்.பி.ராஜா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in