

புதுச்சேரியில் இருந்து டெல்லி தலைமை இடத்துக்குச் சென்று, காங்கிரஸில் தனித்தடம் பதித்தவர் நாராயணசாமி. ஒரு காலத்தில் கட்சித் தலைமையோடு நெருக்கமாக இருந்தவர்.
கடந்த 1985-ல் மாநிலங்களவையில் முதல்முறையாக நுழைந்த நாராயணசாமி, 1991, 2003-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அத்துடன் மத்திய அமைச்சராகவும் நாராயணசாமி வலம் வந்தார். மன்மோகன் சிங், சோனியா, ராகுலுடன் நெருக்கமாக இருந்து வந்தார். பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தொடர்ந்து 2016-ல் புதுச்சேரி மாநில அரசியலுக்குள் வந்தார். அப்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். பின்னர் இடைத்தேர்தலில் வென்றார்.
கடந்த 2021-ல் புதுச்சேரி காங்கிரஸில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வெளியேறி பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸில் இணைய காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. நாராயணசாமியும் போட்டியிடவில்லை. ஆனாலும், காங்கிரஸில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்தச் சூழலில், ஏப்.9-ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்பவர்களில் ஒருவரே முதல்வர் வேட்பாளர் என்று காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்தது. இதனால் தனது முந்தைய தொகுதியான நெல்லித்தோப்பில் போட்டியிட ஆர்வம் காட்டினார் நாராயணசாமி. கடந்த சில மாதங்களாக நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வந்தார். பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் வேட்பாளர் போட்டியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் முந்தியிருக்கிறார். தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
இண்டியா கூட்டணியில், திமுக – காங்கிரஸ் இடையே மோதல் நிலவும் சூழலில், திமுக வேட்பாளர்கள் நிற்கும் 5 தொகுதிகளில் போட்டி வேட்பாளர் களாக களமிறங்கும் காங்கிரஸ்காரர் களுக்கெல்லாம் ஏ, பி பார்மில் கையெழுத்திட்டு வழங்கிய வைத்திலிங்கம், நாராயணசாமியின் வேட்பு மனுவில் கடைசி வரை கையெழுத்திடாமலேயே இழுத்தடித்தார். இதைக் கண்டித்து நாராயணசாமி ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் வீட்டின் முன்பு, கட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், “நாராயணசாமியை புறக்கணிக்கவில்லை. நான் தட்டாஞ்சாவடியில் வென்றால், மக்களவை உறுப்பினர் பதவியை துறப்பேன். அப்போது அந்த இடைத் தேர்தலில் நாராயணசாமியை நிறுத்துவோம். நன்கு பேசக் கூடிய ஒரு நபர் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. இது தவறா?” என்று விளக்கம் கொடுத்திருகிறார் வைத்திலிங்கம்.
எனினும், நாராயணசாமி தற்போது முடங்கிப் போயிருக்கிறார் என்பதே உண்மை. தேர்தல் களத்தில் அவரை பார்க்க முடிவதில்லை. பிரச்சாரத்துக்கும் வரவில்லை. இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, "வைத்திலிங்கம் தொடக்கம் முதலே முதல்வர் பதவியை குறி வைத்து செயலாற்றுகிறார். காங்கிரஸ் வென்றால், தனக்கு போட்டியாக நாராயணசாமி வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
கட்சித் தலைமைக்கு சிலர் அனுப்பிய கடிதத்தில், இந்த முறை நாராயணசாமி பிரச்சாரம் செய்தால் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலிட உத்தரவுப்படி நாராயணசாமி செயல்படுவதால் பிரச்சாரத்துக்கு வரவில்லை’’ என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பணியைப் பார்வையிட புதுச்சேரி வந்த கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டதற்கு, “நாராயணசாமிக்கு தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அப்பணியை அவர் செய்கிறார்” என்று குறிப்பிட்டார். ஒருவேளை குண்டுராவ் குறிப்பிடுவது போல் அவர் அந்தப் பணியைச் செய்யக் கூடும்.