

வேலூர்: வேலூருக்கு மார்ச் 6-ம் தேதி பிரதமர் மோடி வருகைதர உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் புதிய நீதிக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்துக்காகவே பிரதமர் மோடி வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்த நாட்களில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதை காட்டும் வகையில் பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 6-ம் தேதி வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வருகைதர உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் கே.வெங்கடேசன் ஆகியோர் வேலூர் மாவட்ட விழா ஏற்பாட்டு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் வருகை மூலம் வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முன்னோட்டமாக, வேலூரில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தடையற்ற மருத்துவ உதவி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தி ஏ.சி.சண்முகம் நேற்று தனது சமூக ஊடக பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ஏ.சி.சண்முகம் உடனிருந்தார்.
அப்போது, வேலூர் சட்டப் பேரவை தொகுதியில் நீங்களே போட்டியிடுங்கள் என ஏ.சி.சண்முகத்தை அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏ.சி.சண்முகம் விரும்புகிறார். இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகும்.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டத்தில்தான் நடந்தது. ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். அன்றைய நேரத்தில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் யார் என்றுகூட அறிவிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி, ஏ.சி.சண்முகத்துக்கு பிரச்சாரம் செய்ய வேலூர் வந்தார். தற்போது, இரண்டாவது முறையாக வேலூர் வருகை தர உள்ளார்’’ என்றனர். மேலும், ‘கடந்த மக்களவை தேர்தலில் வேலூர் சட்டப் பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் 84 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்றார். ஏ.சி.சண்முகம் 64 ஆயிரத்து 822 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வெறும் 11 ஆயிரத்து 926 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளதால் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டால் நாங்களும் அதிமுக பெற்ற வாக்குகளும் சேர்த்தால் 76 ஆயிரத்து 748 வாக்குகள் வரும். இந்த தேர்தலில் தவெக போட்டியில் இருப்பதால் ஏ.சி.சண்முகம் வேலூரில் நிச்சயம் வெற்றிபெறுவார்’’ என்றனர்.