முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.58,214 கோடி முதலீட்டுக்கான 78 ஒப்பந்தங்கள்: அரசு தகவல்

65,786 பேருக்கு வேலைவாய்ப்பு
முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.58,214 கோடி முதலீட்டுக்கான 78 ஒப்பந்தங்கள்: அரசு தகவல்
Updated on: 
4 min read

சென்னை: சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரூ.7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (நவ.25) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 58,214 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 7,925 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1,430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இம்மாநாட்டுக்கு முன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இன்றைய இரண்டாவது வெற்றி முதலீட்டு மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 200 நாட்களில் 1.73 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளன. 1,98,557 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியத் திட்டங்களின் விவரங்கள்:

ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வழங்கும் வாஷின் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் (Hwashin Automotive India Private Limited) (ரூ. 850 கோடி) மற்றும் ஸீயோன் இ-க்வா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் (Seoyon E-Hwa Summit Automotive India Private Limited) (ரூ.520 கோடி) ஆகிய இரு நிறுவனங்களும் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகள் என்ற வகையில் தங்களது விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. இதன்மூலம், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

போஸ்கோ (Posco): தென் கொரியாவின் முன்னணி தொழில் குழுமமாகவும், உலகின் மிகப் பெரிய எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், மின்சார வாகன பேட்டரி மூலப்பொருட்களின் முக்கிய உலகளாவிய விநியோக நிறுவனமாகவும் திகழும் போஸ்கோ நிறுவனம், ரூ.250 கோடி முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஃகு பதப்படுத்துதல் திட்டம் அமைக்க உள்ளது.

ராயல் என்பீல்ட் நிறுவனம்: ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக இருசக்கர மின்வாகனம் (Electric Motor Cycle) ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 500 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு என்ற வகையில், உற்பத்தித் திட்டம் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், பிரீமியம் ரக EV மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கான உலகளாவிய மையமாகத் தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்பெறுகிறது. இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுவரும் பொறியியல் நுட்பம் மற்றும் கைவினைத் திறனைப் பறைசாற்றும் C6 மாடல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முன்னணி ஜவுளி நிறுவனங்கள்: தமிழ்நாட்டின் முன்னணி ஜவுளி நிறுவனங்களான ராம்ராஜ், எஸ்சிஎம், அவனீதா, கேபிஆர், அர்த்தநாரி, எல்எஸ் மில்ஸ் மற்றும் ஜிஹெச்சிஎல் ஆகியவை தங்களது உற்பத்தித் திறன் மற்றும் உள்நாட்டு பிராண்டுகளை விரிவுபடுத்தப் பெருமளவிலான முதலீடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜெர்மனியின் யூரோ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விருதுநகரில் ரூ.100 கோடி முதலீட்டில் பருத்தி ஜாக்கார்டு துணி உற்பத்தி ஆலையை அமைக்கவும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் விரிவாக்கம் செய்யவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேற்கண்ட துறைகளில் 3,928 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 14,650 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த பிஎம்சி ஹைட்ராலிக்ஸ் நிறுவனம், பெங்களூருவில் உள்ள தனது உற்பத்திப் பிரிவின் ஒரு பகுதியைத் தமிழ்நாட்டிற்கு மாற்றி, தனது முதல் உற்பத்தி ஆலையை ரூ.300 கோடி முதலீடு மற்றும் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் அமைக்கவுள்ளது.

ஜேகே ஃபென்னர் நிறுவனம், ரூ.900 கோடி முதலீடு மற்றும் 1,650 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், சிவகங்கையில் மிகப்பெரிய அளவிலான புதிய உற்பத்தி ஆலையை அமைக்க முதலீடு செய்யவுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டபிள்யூஇஜி நிறுவனம், தருமபுரி மாவட்டத்தில், ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் தனது ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புதிய கிரீன்பீல்டு முதலீட்டை மேற்கொள்ளவுள்ளது. மின்மோட்டார்கள் (Motors), தானியங்கி இயக்கக் கருவிகள் (Automation) மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Devices) என்று ஒருங்கிணைந்த உற்பத்தித் திட்டமாகவும், பிரேசில் நாட்டிலுள்ள திட்டத்திற்குப் பிறகு, மிகப்பெரிய ஒருங்கிணைந்த திட்டமாகவும் இது அமைந்திடும்.

ராணா செமிகண்டக்டர்ஸ் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரூ. 150 கோடி முதலீடு மற்றும் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இந்தியாவின் உள்நாட்டு ஆழ்நிலைத் தொழில்நுட்பத் (Deep-Tech) துறையில், Czochralski (CZ) படிக வளர்ப்பு தொழில்நுட்பத்தில் (Crystal Growth Technology) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். சுமார் 70 சதவீதம் உள்நாட்டுப் பங்களிப்புடன் தனது சொந்த உற்பத்தி இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் வடிவமைத்து உருவாக்குவது இந்நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்.

உலர் துறைமுகங்கள்: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் (Multi modal logistic parks) மற்றும் உலர் துறைமுகங்கள் (Dry Ports) மிக முக்கியமான இடங்களில் நிறுவிடும் வகையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில், ரூ.15,250 கோடி முதலீடு மற்றும் 8,375 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 12 பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், ரூ.125 கோடி முதலீடு மற்றும் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடு

மேற்கூறிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில் வளர்ச்சியைத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் தேனி ஆகிய தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இம்மாவட்டங்களில் ரூ.17,413 கோடி முதலீடுகள் மற்றும் 16,411 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு

இன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 12 நிறுவனங்கள் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவையாகும். இவை அனைத்தும், அடுத்த தலைமுறை வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்கள் ஆகும். இத்துறையில், புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் தொழில்முனைவோருக்கும் தமிழ்நாடு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி வருவதையே இது எடுத்துக்காட்டுகிறது.

மொத்தம் கையெழுத்திடப்பட்டுள்ள 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 58 ஒப்பந்தங்கள் புதிய தொழில் திட்டங்களை (Greenfield Projects) நிறுவுவதற்கானவை. இவை மொத்த முதலீட்டு மதிப்பில் 64 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மேலும், 18 ஒப்பந்தங்கள் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கானவை (Brownfield Projects) என்பதுடன், 2 ஒப்பந்தங்கள் புதிய முதலீடு மற்றும் விரிவாக்கம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்புத் திட்டங்களாகும்.

பிரேசில், பின்லாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலைமையகம் கொண்ட 14 நிறுவனங்கள் ரூ.14,798 கோடி அளவிற்கான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொண்டுள்ளன. இது தமிழ்நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், உலகளாவிய முதலீட்டு மையமாகத் தமிழ்நாடு உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, கனரக மற்றும் துல்லியப் பொறியியல், ஜவுளி, தொழிற்பூங்காக்கள் மற்றும் தளவாடங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் கட்டுமானம், இரசாயனத் தொழில்கள், உணவுப் பதப்படுத்துதல், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவியத் திறன் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.

நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

செட்டிநாடு ஏரோஸ்பேஸ் டெவலப்மெண்ட் அலையன்ஸ் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) இடையே சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு ஏரோநாடு-வில் பிரத்யேக ட்ரோன் தொழில்துறை மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. ட்ரோன் உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு, மாதிரி வடிவமைப்பு, சோதனை மற்றும் பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இம்மையம் உருவாக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (CASR) மூலம் செயல்படுத்தப்படும் BVLOS சோதனை மற்றும் பயிற்சி வசதியும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அமையும்.

அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனம் : தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பொருள்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், மின்னணு வர்த்தகம் வாயிலான ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனத்துடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அமேசான் தளத்தில் புதிதாக விற்பனையாளர்களாகப் பதிவு செய்யும் தகுதியுடைய ஏற்றுமதியாளர்கள், 50,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பிலான சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற வாய்ப்புள்ளது. இதில், பிராண்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான விற்பனை ஊக்கத்தொகைகள், அமேசான் வைன் சலுகை, சரக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கட்டணச் சலுகைகள், எஃப்பிஏ மற்றும் விநியோகச் சேவைகளுக்கான தள்ளுபடிகள், விளம்பரச் செலவுகளுக்கான அதிகபட்சம் 1,000 அமெரிக்க டாலர் வரையிலான கடன் சலுகை மற்றும் 50 அமெரிக்க டாலர் விளம்பரக் கூப்பன் ஆகியவை அடங்கும். இச்சலுகைகள், தகுதி மற்றும் திட்டங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். இவை ஏற்றுமதியாளர்களின் சந்தை நுழைவுச் செலவுகளைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சர்வதேசச் சந்தைகளில் வணிக வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.

ரூ.7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 புதிய திட்டங்களுக்கு முதல்வரால் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. மேலும், ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 முடிவுற்ற திட்டங்கள் முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.58,214 கோடி முதலீட்டுக்கான 78 ஒப்பந்தங்கள்: அரசு தகவல்
டிவிஎஸ் விவகாரம்: தந்தை சொத்துகளில் சம பங்கு கோரி லட்சுமி வேணு வழக்கு

X