களத்தில் நாராயணசாமி... கட்டை போடும் திமுக? - நெல்லித்தோப்பு யாருக்கு ‘கில்லி’த்தோப்பாகும்?

களத்தில் நாராயணசாமி... கட்டை  போடும் திமுக? - நெல்லித்தோப்பு யாருக்கு ‘கில்லி’த்தோப்பாகும்?
Updated on
2 min read

அரசியல் விநோதங்களை அசாதாரணமாக நிகழ்த்துக் காட்டுபவர்கள் புதுச்சேரி அரசியல்வாதிகள். இந்தத் தேர்தலுக்கும் அதற்கான முன்னோட்டங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வென்ற தொகுதிகள் மீது அவர்களோடு கூட்டணியில் இருக்கும் பாஜக பார்ட்டிகளே இம்முறை பாசப் பார்வை வீசுகிறார்கள்.

அதேபோல் அந்தப்பக்கம் இண்டியா கூட்டணியில், முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி கடந்த முறை திமுக-வுக்கு விட்டுக் கொடுத்த தொகுதி மீது இம்முறை கரிசனக் கண் வைக்கிறார்.

கடந்த 2016-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அப்போது தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தது காங்கிரஸ். இதனால், தேர்தலில் நின்று வென்றிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அப்செட் ஆனார். அவரை சமாதானம் செய்ய ‘சத்தான’ துறைகளுக்கு அவரை அமைச்சராக் கினார்கள்.

அதே சமயம், நாராயணசாமி 6 மாதத்துக்குள் எம்எல்ஏ ஆகவேண்டிய கட்டாயம் இருந்ததால் அவருக்காக, நெல்லித்தோப்பு எம்எல்ஏ-வான ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நாராயணசாமி போட்டியிட இடம் கொடுத்தார். ஆனால், அந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், ஜான்குமாரும் நமச்சிவாயமும் ஜோடியாக பாஜக ஜோதியில் கலந்ததால் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில் கடந்த 2021 தேர்தலில் நாராயணசாமி மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கினார். இதனால், அவரது நெல்லித்தோப்பு தொகுதி திமுக-வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளரை பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான்குமாரின் மகன் ரிச்சர்ட் வீழ்த்தினார். அத்துடன், அந்தத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக-வுக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது காங்கிரஸ்.

இந்தச் சூழலில், இம்முறை நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளை திமுக ஜரூராக ஆரம்பித்து விட்டது. ஆனால், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களாக போட்டியிட ஆர்வம் இல்லாமல் இருந்த நாராயணசாமி, இம்முறை போட்டிக்குத் தயாராகிறார். இதில் சிக்கல் என்னவென்றால், தன்னால் திமு-வுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட நெல்லித்தோப்பு தொகுதியிலேயே நாராயணசாமியும் ‘கதவை திறப்போம் காற்று வரட்டும்’ என்று கிளம்பி இருப்பது தான் கலகப் புகையை மூட்டி இருக்கிறது.

அண்மைக் காலமாக நெல்லித்தோப்பையே வட்டமடிக்கும் நாராயணசாமி, தொகுதி நிர்வாகிகளைச் சந்திப்பது, முக்கியப் பிரமுகர்களுடன் உரையாடுவது என சுறுசுறுப்பாகி வருகிறார். வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் போது நெல்லித்தோப்பின் மூலை முடுக்கில் எல்லாம் நின்று கையெழுத்து வாங்கினார் நாராயணசாமி.

இதையெல்லாம் பார்த்துவிட்டு நாராயணசாமி இம்முறை நெல்லித்தோப்பில் தான் நிற்கப் போகிறார் என்று மக்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

நாராயணசாமி இப்படியொரு மூவில் இருக்க, கடந்த முறை இங்கு போட்டியிட்டு தோற்ற திமுக-வும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் கூட்டம் என நெல்லித்தோப்பை இம்முறை தங்களின் ‘கில்லி’த் தோப்பாக்கும் வேலைகளில் முழுமூச்சுடன் இயங்க ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றி புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவாவிடம் கேட்டதற்கு, "நெல்லித்தோப்பு தொகுதியை நாங்கள் தான் நாராயணசாமியிடம் தந்தோம்.

கடந்த தேர்தலில் அவர் அதை மீண்டும் எங்களிடம் தந்துவிட்டார். இம்முறையும் நெல்லித் தோப்பில் நாங்கள் தான் போட்டியிடுவோம். இருந்தபோதும் அந்தத் தொகுதிக்குள் எஸ்ஐஆர் பற்றி வீதி வீதியாகச் சென்று பேசி வருகிறார் நாராயணசாமி. அங்கு கூட்டணிக் கட்சியான திமுக வெற்றிபெற கடுமையாக உழைக்கும் நாராயணசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று சொல்லி சிரித்தார்.

நாராயணசாமியின் நெல்லித்தோப்புக் கனவுக்கு பார்ட்னர் கட்சியான திமுக ஆரம்பத்திலேயே இப்படி கறாராகப் பேசி கட்டையைப் போடுகிறது. நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதேபோல் நாராயணசாமி மூட்டி இருக்கும் இந்த தேர்தல் கலகம் எங்குபோய் எப்படி முடிகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

களத்தில் நாராயணசாமி... கட்டை  போடும் திமுக? - நெல்லித்தோப்பு யாருக்கு ‘கில்லி’த்தோப்பாகும்?
திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை: 100 தொகுதிகளில் நிறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in