

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் - உத்தண்டி வரையிலான 4 வழி மேம்பாலம் மற்றும் 6 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டருக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குகடற்கரை சாலையில் 4 வழிகள் கொண்ட மேம்பாலமும், அதன்பிறகு உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான ஆன்லைன் டெண்டரை மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஆக.25-ம் தேதி வெளியிட்டது.
இந்த டெண்டரில் பங்கேற்ற தங்களது விண்ணப்பத்தை நெடுஞ்சாலைத்துறை நிராகரித்து விட்டதாக போபாலைச் சேர்ந்த திலீப் பி்ல்டுகான் என்ற தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முறைகேடாக வழங்கல் அதில், ‘‘எங்களது நிறுவனம் சார்பில் பல ஆயிரம் கோடி மதிப்பில் மெகா பட்ஜெட் சாலை பணிகளையும், மேம்பாலப் பணிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
ஆனால் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டர், ஏற்கெனவே கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகளை சரியாக செய்யாததால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.
இது டெண்டர் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அந்த டெண்டருக்கு தடைவிதித்து அதை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் மூத்தவழக்கறிஞர் சி.மணிஷங்கர் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜன.27 வரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.