

படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரையில் சில வாரங்களாக தொடரும் கடும் வெயில் இன்றும் அடித்தது. மதியத்துக்குப் பின்னர் கருமேகங்கள் திரண்டு திடீர் மழை பெய்து மதுரை மக்களை குளிர்வித்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகம் முழுவதும் பருவகால மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதுரையில் தொடர்ந்து சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை குறைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் வரை கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணியளவில் வெயில் குறைந்து வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழத் தொடங்கியது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென மழை பொழிந்தது. சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
இந்த மழையால் மதுரையில் பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் தேங்கிய மழைநீரில் சிரமத்தோடு ஓட்டிச் சென்றனர்.
மழைநீரோடு கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்வரும் வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
பின்பு மழை பெய்து முடித்த ஒரு மணிநேரத்தில் மழைநீர் வழிந்தோடியது. இதனால் சில வாரங்களாக கடும் வெப்பத்தில் தவித்த மக்களை திடீரென பெய்த மழை குளிரச் செய்தது.