

குன்னூரில் நடந்த விழாவில் உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய நூற்றாண்டு விழா மலரை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். உடன், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர். படம்: ஆர்.டி.சிவசங்கர்
குன்னூர்: இந்திய தேயிலைத் துறை சர்வதேச அளவில் அறியப்படும் வலுவான வர்த்தக அடையாளத்தை (பிராண்ட்) உருவாக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இதனை சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உபாசி தலைவர் அஜய் திப்பய்யா வரவேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலை வகித்தார்.
விழா மலரை வெளியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தென்னிந்தியாவின் சிறு மற்றும் பெரிய தோட்ட உரிமையாளர்களுக்கு உபாசி கடந்த 100 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. உற்பத்தி மட்டுமன்றி தரமான தயாரிப்பு, மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை சிறிய நாடாக இருந்தாலும், இந்திய தேயிலை வர்த்தகத்துக்கு கடும் போட்டியாக உள்ளது.
எனவே, உற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தை மேம்படுத்துதல், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக உபாசி தனது ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். இந்தியதேயிலைத் துறை மொத்த விற்பனை வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வதேச அளவில் அறியப்படும் வலுவான பிராண்டுகளை உருவாக்க முன்வர வேண்டும்.
பிராண்டிங் மூலம் அதிக மதிப்பும், உயர்ந்த விலையும், நிலையான சந்தையும் கிடைக்கும். மேலும், தேயிலை தொழிலில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஆளுநர் அர்லேகர் பேசும்போது, “ஒரு காலத்தில் தேநீர் விற்பனையாளராக இருந்தவர் இன்று உலகத் தலைவராக (பிரதமர் மோடி) உயர்ந்திருக்கிறார். ஆராய்ச்சி, புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தரமான உற்பத்தி ஆகியவை இந்திய தேயிலைக்கு உலகளவில் பெயரும் புகழும் பெற்றுத் தருகின்றன” என்றார். விழாவில், தேயிலை வாரிய துணைத் தலைவர் சி.முருகன், ஊட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மு.போஜராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.