

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபடும் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. அவர்களுக்கான ஊக்கத் தொகையும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்தப் பணிக்கு நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பிஹாரைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் வீடு வீடாக படிவங்களை வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது, இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடியேறிச் சென்றவர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர் கள் உள்ளனர். அதனால் மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் 68,464 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள பிஎல்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தில் ஒருவர் எஸ்ஐஆர் பணியால் பணிச்சுமை அதிகரித்தாக கூறி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் முழுவதும் பிஎல்ஓக்கள் சில தினங்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் தமிழகத்தில் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து, ரூ.12 ஆயிரமாகவும், பிஎல்ஓ மேற்பார்வை யாளர்களுக்கு ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாகவும், பிஎல்ஓக்களுக் கான ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று முன்தினம் அரசாணை பிறப்பித்துள்ளார்.
பிஎல்ஓக்களுக்கான ஊதியம் கடந்த 2015-ம் ஆண்டுதான் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளாக அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.