

மதுரை: தமிழகத்தில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க கோரும் மனுவை மது விலக்கு ஏடிஜிபி பரிசீலிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சீர்மரபினர் நலச்சங்கத்தின் சட்டப்பிரிவு தலைவர் கவுதம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் செயல்பாட்டில் உள்ளது எனத் தெரிவிக்கப்பப்பட்டது. சட்டப்படி மருத்துவம், அறிவியல், தொழிற்சாலைகளுக்காக மட்டும் மதுவை உற்பத்தி செய்து விற்பனை செய்ய, குடிக்க வழங்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பிலும் உரிமம் இல்லாதவர்களுக்கு மதுவை குடிக்க விற்பனை செய்யக்கூடாது என உத்தரவு உள்ளது. மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தாலும், பலர் மதுவுக்கு அடிமையாக்கி வாழ்வை சீர்குலைத்து வருகின்றனர்.
மதுவால் தொழிலாளர்களின் வேலை செய்யும் திறன் குறைந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. அனைத்து கட்சிகளும் படிப்படியாக மதுவை குறைத்து பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றன. எனவே தமிழக டாஸ்மாக் நிறுவனம் மது குடிக்க உரிமை இல்லாதவர்களுக்கு மதுவை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மதுவிலக்கு பிரிவின் கூடுதல் டிஜிபி மனுதாரரின் மனுவை பரிசீலித்து 6 வாரங்களில் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.