

சென்னை: இந்திய கடல் பகுதிகளில் 3 காற்று சுழற்சிகள் நிலவுகின்றன. அந்தமான் பகுதியிருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி நவ.27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.30-ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக செனனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்தி வருகின்றன. இவை ஒன்றாக இணைந்து கூட நகர வாய்ப்புள்ளது. இவற்றின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் நாளை (நவ.27) ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 26, 27 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 28-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 30-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (நவ.24) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 26, 27 தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-ம் தேதி திருவள்ளூரில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி 4 இடங்களில் அதிகனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செமீ, நாலுமுக்கில் 22 செமீ, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் தலா 21 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆகிய இடங்களில் தலா 14 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்.1 முதல் நவ.24-ம் தேதி வரை வழக்கமாக 33 செமீ மழை கிடைக்கும். இந்த ஆண்டு 34 செமீ, அதாவது 5 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக அதிகமாகவும், திருப்பூர், கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாகவும் மழை பெய்துள்ளது” என்று அவர் கூறினார்.