

சென்னை: வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், விதிகளை மீறி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த அமெரிக்க வாழ் தமிழர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்தது. இருப்பினும், வெளி நாட்டு குடியுரிமை பெற்று, இந்திய பாஸ்போர்ட்டை இழந்த பலரும் இந்தத் தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளி நாடுகளுக்குத் திரும்பும் பயணிகளின் கை விரல்களில் தேர்தல் மை உள்ளதா என்று சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்த எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர் (64) என்பவரின் ஆவணங்களை சரி பார்த்தபோது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில், அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தேர்தலின் போது வைக்கப்படும் அழியாமை இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிஷோர் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக மீறி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சட்ட விரோதமாக வாக்களித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது துபாய் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவருடன் சேர்த்து, தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்து கைதான வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.