டெல்டாவில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய ஐஜேகே வலியுறுத்தல்

 கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் | கோப்புப் படம்

கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட கடலூர் மாவட்டப் பகுதிகளிலும், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்து, பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டார நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 55 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும், கொள்முதல் தாமதத்தால் மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

இது குறிஞ்சிப்பாடியில் மட்டும் நிலவும் பிரச்சினை அல்ல. அண்மையில் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள 5 கொள்முதல் நிலையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டதாகவும், மழையில் நனைந்து நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட ரெட்டிபாளையத்தில் மட்டும் செப்டம்பர் மாதத்தில் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருந்த நிலையும் பதிவாகியுள்ளது. அதேபோல, வடலூர் அருகே கருங்குழியில் சுமார் 10 ஆயிரம் மூட்டைகள் திறந்தவெளியில் தேங்கியிருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினை கடலூர் மாவட்டத்தையும் கடந்து டெல்டா மாவட்டங்களிலும் தொடர்கின்றது. திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் கொள்முதலில் பிரச்சினை இருப்பதாக தகவல் வந்துள்ளது.

விதைத்து, வளர்த்து, அறுவடை செய்த விவசாயிகளின் நெல் அரசின் நிர்வாகத் தாமதத்தால் மழையில் நனைந்து வீணாவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல போதிய வாகனங்கள், தொழிலாளர்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாகத் திறக்க வேண்டும்.

குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட கடலூர் மாவட்டப் பகுதிகளிலும், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்து பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p><em> கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் | கோப்புப் படம்</em></p></div>
“மதுராந்தகத்தில் தவெக அதிகளவில் பணப்பட்டுவாடா” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in