

ஐஜேகே ஆர்ப்பாட்டம்
சென்னை: மேகேதாட்டு அணையை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்து, இந்திய ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடுவர்மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறப்பதோடு, மேகேதாட்டு அணையை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசின் அறத்துக்கு எதிரான செயலைக் கண்டித்து, இந்திய ஜனநாயகக்கட்சி (ஐஜேகே) சார்பில், சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், துணை பொதுச்செயலாலர் ஆனந்த முருகன், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக பேனர்களை கையில் ஏந்தி முழுக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து பேசியதாவது: நதிநீர் பங்கீடுக்காக ஏன் போராடுகிறோம் என்றால், அதில் தேசிய பார்வை இல்லை. தேசியத்தில் இருப்பவர்கள் நதியை இணைத்தால் தான் நாடு வளம் பெறும். எந்த பூமியும் வறட்சியான பூமியாக இருக்காது. ஆட்சி, அரசியல் செய்ய வேண்டுமெனில், ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் கூட்டணி வரும்போது, தனது மக்களை திருப்தி படுத்த இதுபோல (அணை கட்டும் விசயம்) விசயத்தை கையில் எடுத்து, தேசிய பார்வையை குழைக்கிறார்கள்.
வளங்களை அழித்து இந்தமாதிரி அணை தேவையில்லை. தவெக அரசு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. தமிழகத்தின் வழியாக கர்நாடகாவுக்கு எந்த கட்டுமானப்பொருள்களை எடுத்துச் செல்ல தவெக அரசு அனுமதிக்கக்கூடாது. நட்பு வைத்து கொள்ளுங்கள். அதேநேரம் தேசிய பார்வையுடன் இருங்கள், தவறு இல்லை.
மாநிலங்கள் இடையே சண்டை மூட்டிவிட்டு, வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. ஆனால், நமது மாநிலம் பாதிக்கும் என்றால், அதை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள். உங்களை நான் அனுமதிக்க மாட்டேன் என தவெக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசை துணிச்சலாக எதிர்க்க வேண்டும். காங்கிரஸில் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்து உள்ளார்கள். இவர்கள் போனாலும் மற்றவர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.
தமிழக மக்கள் படித்தவர்கள், சிந்தனை உள்ளவர்கள், மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று நம்பி உங்களுக்கு( தவெகவுக்கு) ஆதரவு அளித்தார்கள். அதை செய்ய மறுத்தால், ஐஜேகே சும்மா இருக்காது. ஐஜேகே அனைத்து கட்சிகளை திரட்டி, தமிழகம் முழுவதும் போராட்டத்தை கையில் எடுக்கும். எந்தக் காலத்திலும் அணை கட்ட விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.