

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் கபூர், சென்னை ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
சென்னை: பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐஐடி அறக்கட்டளையுடன், இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, ராணுவத் தொழில்நுட்பங்களில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பது தொடர்பாக, சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையுடன், இந்திய ராணுவத்தின் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவு நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரவர்தக் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன், இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் கபூர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, ஆவடியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் குறித்து மேஜர் ஜெனரல் லலித் கபூர் கூறும்போது, “ஐஐடி பிரவர்தக் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ராணுவத்தின் இஎம்இ பிரிவு, ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களின் தரத்தையும் மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இதன்மூலம், பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்துள்ளதை கணிசமாக குறைக்க முடியும்” என்றார்.
ஐஐடி பிரவர்தக் அறக்கட்டளையின் வியூக ஆலோசகரும், தென்பிராந்திய ராணுவத்தின் முன்னாள் கமாண்டிங் அதிகாரியுமான லெப்டினென்ட் ஜெனரல் கரன் சிங் பிரார் கூறும்போது, “இந்த கூட்டு முயற்சி மூலம் கல்வி நிறுவனம் மற்றும் ராணுவத்தின் திறமைகளை ஒருங்கே பயன்படுத்த முடியும்’’ என்றார்.