

சென்னை: இளைஞர்கள் திருக்குறளைப் படித்து, அதன் அடிப்படையில் வாழ்க்கை நடத்தினால் அது உன்னதமான வாழ்க்கையாக அமையும் என சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வு வரும் நவ.28-ம் தேதி முதல் டிச.12-ம் தேதி வரை “திருக்குறள் பயில்வோம் - திருக்குறள் அப்யாஸ் கரேன்” என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, வி.காமகோடி “இந்து தமிழ் திசை” நாளிதழுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார்: நடப்பாண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி-யின் பங்களிப்பு என்ன? காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு நாங்கள் எப்போதும் தொழில் நுட்ப ஆதரவு வழங்குகிறோம்.
இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்க விண்ணப்பித்த 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்வதற்காக காசி மற்றும் திருக்குறள் குறித்த இணைய வழி விநாடி-வினா போட்டியை நடத்தியுள்ளோம்.
பிரதமர் மோடி திருக்குறளைப் போற்றிப் பல இடங்களில் பேசியுள்ளார். அதற்கேற்ப இந்த ஆண்டு கருப்பொருளும் திருக்குறளாக அமைந்துள்ளது.
விநாடி-வினா மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து, நேர்காணல் மூலம் நிகழ்ச்சி குறித்து விளக்கி வருகிறோம்.
தமிழகத்திலிருந்து எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்? தமிழகத்திலிருந்து 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
முதல் ரயில் நவ.25-ல் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, சென்னை வழியாக வாராணசிக்குச் செல்கிறது. தமிழகத்திலிருந்து சுமார் 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருக்குறளைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? பிரதமரின் கனவான ‘உன்னத பாரதம் 2047’-ஐ உருவாக்கப் போகிறவர்கள் இன்றைய இளைஞர்களே.
அவர்கள் திருக்குறளைக் கற்று, அதன் நெறிப்படி வாழ்ந்தால் நாடு உன்னத நிலையை அடையும். திருக்குறள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
இன்டர்ன்ஷிப் பயிற்சியில் எத்தனை பேர் பங்கேற்கின்றனர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமாக, நாடு முழுவதும் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன் திருக்குறள் ஆராய்ச்சிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் 1,000 கட்டுரைகள் வழியாக நாடு முழுவதும் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், தொழில்நுட்ப உதவியுடன் திருக்குறளுக்கு எனப் பிரத்யேக மொழி மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.