வலது: வினய் குமார்
“என்டிஏ-வில் விஜய்யின் தவெக இணைந்தால் பாஜகவுக்கே லாபம்!” - ‘பிரஜா ராஜ்ஜியம்’ வினய் குமார் சிறப்புப் பேட்டி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மாற்றாக தவெக வர முடியுமா? என்டிஏ கூட்டணியில் தவெக இணைந்தால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும்? அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த சிரஞ்சீவியால் தேர்தலில் வெற்றி பெற முடியாதது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சிவசங்கரனின் மகனும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணரும், நடிகர் சிரஞ்சீவியின் ‘பிரஜா ராஜ்ஜியம்’ கட்சியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவருமான வினய் குமார்.
காங்கிரஸ் கட்சியுடன் பிரஜா ராஜ்ஜியம் கட்சி இணைக்கப்பட்டபோது, வினய் குமாரும் அதில் இணைந்தார். பிறகு தெலங்கானா சமாஜ் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய இவர், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி தற்போது அக்கட்சியின் அரசியலமைப்பு பாதுகாப்பு குழு தலைவராக உள்ளார். ‘இந்து தமிழ் திசை’ இணையத்துக்காக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...
பிரஜா ராஜ்ஜியம் கட்சியை(பிஆர்பி) 2008-இல் நடிகர் சிரஞ்சீவி துவக்கியதன் பின்னணியைக் கூற முடியுமா?
“புகழின் உச்சிக்குச் சென்ற சிரஞ்சீவிக்கு சுமார் 10 வருடங்களாக அரசியல் கட்சி துவக்கும் எண்ணம் இருந்து வந்தது. சரியான நேரத்துக்காக அவர் காத்திருந்தார். சிரஞ்சீவியின் மாமனாரும் நடிகருமான அல்லு ராமலிங்கய்யா அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். அரசியல் கட்சியைத் துவக்கி ஆந்திராவின் முதல்வராக வர வேண்டும் என சிரஞ்சீவி விரும்பினார்.
ஆந்திராவை ஆட்சி செய்த நடிகர் என்.டி.ராமாராவை (என்டிஆர்) அவர் முன்உதாரணமாகக் கருதினார். என்டிஆரும், சிரஞ்சீவியும், நானும் காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிரிக்கப்படாத ஆந்திராவில் இவர்கள் சுமார் 23 சதவிகிதம். காப்பு சமூக மக்களும் தனது ரசிகர்களும் இணைந்து தனது கட்சிக்கு வாக்களித்து தன்னை முதல்வராக்கி விடுவார்கள் என சிரஞ்சீவி கணக்கிட்டார். இதன் காரணமாகவே ஆகஸ்டு 2008 இல் சிரஞ்சீவி புதிதாக கட்சியை துவக்கினார். கட்சியை துவக்குவதில் முக்கிய பங்காற்றிய நான், சிரஞ்சீவியுடன் நெருக்கமாகப் பணியாற்றினேன். பிஆர்பி சார்பில் மக்களவைக்கும் போட்டியிட்டேன்.”
பிஆர்பி-க்கு மக்களிடம் ஆதரவு எப்படி இருந்தது?
“பிரச்சாரக் கூட்டங்களில் சிரஞ்சீவியை நெருக்கமாகப் பார்த்துவிட வேண்டும் என்பதில் ரசிகர்கள் ஒவ்வொருவரும் வெறித்தனமாக இருந்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் மிக அதிக நெரிசல் இருந்தது. எனினும், நல்லவேளையாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்து எல்லோரும் சென்ற பிறகு நாங்கள் பாதுகாவலர்களிடம் விசாரிப்போம். ஆயிரக்கணக்கில் உடைந்த செல்போன்களும், பிய்ந்த காலனிகளும் கிடந்ததாக அவர்கள் கூறுவார்கள். கீழே விழுந்ததை எடுப்பதற்கான இடைவெளிகூட இன்றி, ரசிகர்கள் கூடினர். ஆனால், அவர்கள் சிரஞ்சீவியைப் பார்ப்பதற்காக மட்டுமே கூடினார்கள் என்பதும், அது அரசியலுக்கான ஆதரவு அல்ல என்பதும் தாமதமாகவே தெரிந்தது.”
பிஆர்பியின் முதல் தேர்தல் எப்படி இருந்தது?
“சிரஞ்சீவி கட்சி துவக்கியவுடன் 2009-இல் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்தார். சட்டப்பேரவையில் மட்டும் சுமார் 16 சதவிகித வாக்குகளுடன் 18 தொகுதிகள் கிடைத்தன. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி திருப்பதியில் வெற்றி பெற்றார். பளக்கொல்லியில் தோல்வி அடைந்தார். பல தொகுதிகளில் தாங்கள் காங்கிரஸிடம் அடைந்த தோல்விக்கு பிஆர்பி மற்றும் சிறிய கட்சிகள் பிரித்த வாக்குகளே காரணம் என தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.”
கணிசமான வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி கைவிட்டது ஏன்?
“அப்போது சிரஞ்சீவியைச் சுற்றி இருந்தவர்கள் அவர் எதைச் செய்தாலும் ‘சூப்பர்! வேறு எவராலும் இவ்வாறு செய்ய முடியாது’ என புகழ்ந்து கொண்டே இருந்தனர். கட்சி துவக்கினால் தனது ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களித்து தன்னை ஆட்சியில் அமர்த்துவார்கள் என சிரஞ்சீவி தவறாக எண்ணினார்.
சிரஞ்சீவியைக் காண வரும் கோடிக்கணக்கான ரசிகர்களும், அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அவர் தாமதமாக உணர்ந்தார். இதனால், கட்சியைக் கைவிட முடிவு செய்தார். ஆந்திராவில் 2009 இல் கூட்டணி ஆட்சி அமைத்த காங்கிரஸை வலுப்படுத்த தன் கட்சியை 2011-இல் அதனுடன் இணைத்து விட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் 2012-இல் மத்திய இணை அமைச்சராக இருந்த சீரஞ்சீவி, காங்கிரஸ் கூட்டங்களில் ஆர்வமாகப் பங்கெடுக்கவில்லை. இதனால், பொதுமக்களிடையே சிரஞ்சீவியின் அரசியல் இமேஜ் சரிந்தது. 2014-க்குப் பின் முற்றிலும் அமைதியாக தன் தீவிர நடிப்பை அவர் தொடர்கிறார். எனினும், காங்கிரஸிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக விலகவில்லை.”
எம்ஜிஆர், என்டிஆர் பாணியில் ஒரு நடிகர் ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி ஆந்திராவிலோ, தமிழ்நாட்டிலோ ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமா?
“சிரஞ்சீவி போல புகழ்பெற்ற நடிகர்களின் ரசிகர்கள், அவர் மீது மிகவும் பொஸசிவாக(உரிமை உணர்வு) இருப்பவர்கள். சிரஞ்சீவியின் கூட்டங்களில் கண்ணுக்கு எட்டியத் தூரம் வரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அவரது ரசிகர்கள் கூடி இருந்தனர். திரை உலகில் ஆன்மிக நாயகராக என்டிஆர், காதல் மன்னராக நாகேஸ்வர ராவ், உளவு உலகின் சூப்பர் ஸ்டாராக கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.
அது போல், திரைகளில் மிகவும் சக்திவாய்ந்தவராகச் சித்தரிக்கப்பட்டவர் சிரஞ்சீவி. வில்லன்களை துவம்சம் செய்பவர், ஊழலை ஒழிப்பவர், போலீஸாரை விடப் பலசாலி என ரசிகர்கள் சிரஞ்சீவியைக் கருதினர். இதன் காரணமாக, சாந்தமாக அவர் நடித்த படங்களை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. அதிரடி நடிப்பிலான அவரது படங்களையே அவர்கள் ஹிட் செய்தனர். இந்த பின்னணியில், சிரஞ்சீவியின் சாந்தமான அரசியல் நடவடிக்கைகள் எடுபடவில்லை.
அரசியலில் புதிய மாற்றங்களுடன் ஊழலற்ற ஆட்சியை அமைப்பதாகக் கூறிய சிரஞ்சீவி, வேறுபல கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களை பிஆர்பியில் இணைத்ததை பொதுமக்கள் ஏற்கவில்லை. கடந்த பல வருடங்களாகத் மக்களுக்கு எதையும் செய்யாத இத்தகைய தலைவர்கள் பிஆர்பியிலும் எதையும் செய்யாமல் ஊழல் செய்வதற்கே வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருதினார்கள்.
சிரஞ்சீவி கட்சியைப் பாடமாகக் கொண்டால் திரைநட்சத்திரங்கள் அரசியலில் சாதிப்பது கடினம். தக்க அனுபவத்துடன் அரசியலில் இறங்குவதுடன் அதில் நிலைத்து நின்று மக்களுக்கு பொறுமையுடன் சேவை செய்து தொடர்ந்து குரல்கொடுத்து வந்தால்தான் சாத்தியம். இல்லையெனில், சிரஞ்சீவியைப் போல் பல கோடி ரூபாய் சம்பாதியத்தையும் இழக்க நேரிடும்.”
அரசியல் கட்சி துவக்குவதற்காக நடிகர் ரஜினிகாந்திடமும் சிரஞ்சீவி ஆலோசனைக் கேட்டாரா?
“ஆம். அதற்கு ரஜினி, தன்னுடைய ரசிகர் மன்றங்களை சமாளித்து ரசிகர்களை நல்வழிப்படுத்துவதே தமது முதல் கடமை எனவும், அதுவே மிகவும் கடினமாக இருப்பதால் அரசியல் கட்சி துவக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ரஜினிக்கு அரசியல் கட்சி துவக்கும் விருப்பம் இருந்தும் அதை கடைசி நேரத்தில் கைவிட்டதற்கு இது காரணமாக இருக்கலாம்.”
நடிப்புடன் அரசியலிலும் வெற்றிபெற்ற என்டிஆரைப் போல் சிரஞ்சீவியால் முடியாமல் போனது ஏன்?
“தனது பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்கள் அனைவருக்கும் பிறகு இறுதியில் என்டிஆர் பேசுவது வழக்கம். ஆனால், சிரஞ்சீவியின் கூட்டங்களில் இதர பேச்சாளர்களை அவரது ரசிகர்கள் பேசவிடாமல் ரகளை செய்தனர். என்டிஆரைப் போல் அன்றி, ஒரு தனி உலகில் சிரஞ்சீவி மிதந்து கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத காலத்தில் என்டிஆருக்கு பிரபலப் பத்திரிகைகள் ஆதரவளித்தன. அரசியலில் மிகவும் முக்கியமான இந்த ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கவில்லை. அவரை எந்த பத்திரிகையும் ஆதரிக்கவில்லை. ’அண்ணா! அண்ணா!’ என கூக்குரலிட்டு அவரை உணர்ச்சிபூர்வமாக அழைத்த ரசிகர்களை சிரஞ்சீவி தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்.”
“சிரஞ்சீவியைப் போல், நடிகர் விஜய் தமிழ்நாட்டில் தவெகவைத் துவக்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?”
“தமிழகத்தின் அரசியல் திமுக, அதிமுக என இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது. இவ்விரண்டு கட்சிகளும் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளை உள்ளே நுழைய விடாமல் கூட்டணிக் கட்சிகளாகவே நிறுத்தி விட்டன. இச்சூழலில் விஜய் தனக்கு வரும் கூட்டத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கிட்டால் அது தவறாகி விடும்.
ஏனெனில், ஆந்திராவை விட அதிகமான அரசியல் அறிவு கொண்டது தமிழ்நாடு. திராவிடர்களான தமிழர்கள் ஆரிய எதிர்ப்பை வலுவாகக் கொண்டுள்ளனர். எனவே, இவர்கள் திராவிடக் கட்சிகளுக்கே அதிக ஆதரவளிக்கின்றனர். எனவே, விஜய் மிகவும் யோசித்து தனது அடிகளை எடுத்து வைக்க வேண்டும். அதிமுக உள்ளவரை தவெகவால் திமுகவிற்கு மாற்றுக் கட்சியாக தமிழகத்தில் வளர முடியாது.
நல்ல அரசியல் ஆலோசகர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதர கட்சிகளைப் போல இலவசங்களை விட வளர்ச்சித் திட்டங்களை தவெக முன்னிறுத்த வேண்டும். விஜய், மாற்றம் கொண்டு வர விரும்பினால் வேறு கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களை அவர் தவெகவில் சேர்க்கக் கூடாது. என்டிஆருடன் நாதெள்ள பாஸ்கர் ராவ் தவிர மற்ற சுமார் 90 சதவிகித தலைவர்கள் அவரது தெலுங்கு தேசம் கட்சிக்கு புதியவர்கள்.
பாஜகவில் நரேந்திர மோடி 2014-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போது, தாம் குஜராத்தைப் போல் நாட்டை வளர்ச்சி அடையச் செய்வதாகக் கூறினார். அதை மக்கள் நம்பினர். வளர்ந்ததோ, இல்லையோ குஜராத் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக முன்னிறுத்தப்பட்டிருந்தது. இதுபோல, முன் உதாரணங்களை முன்வைக்க விஜய்யிடம் எதுவுமே இல்லை.”
விஜய், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் என்றும், ஆனால் தற்போது பாஜக அவரை தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறது என்றும் வெளியாகும் தகவல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“தனித்து போட்டியிட்டு தன் பலத்தைக் காட்டுவதுதான் விஜய்க்கு நல்லது. ஏனெனில், கர்நாடகாவில் தேவகவுடா, மகராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே, பிஹாரில் நிதிஷ்குமார் என ஒவ்வொருவராக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓரம்கட்டப்பட்டனர். இதுபோன்ற ஆபத்து அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜகவுடன் சேர விஜய் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இருவரும் இணைந்தால் தவெகவால் பாஜகவிற்கு லாபமே தவிர அதன் தலைவர் விஜய்க்கு எதுவும் கிடைக்காது.”
பாஜக கூட்டணியில் தவெகவை இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முயல்வதாகக் கூறப்படுவது பற்றி?
“பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவை, பாஜகவுடன் இணைத்தவர் பவன் கல்யாண். இந்த இணைப்பால் துணை முதல்வர் அளவிற்கு அதிக லாபம் பெற்றாலும் அவரது தனிப்பட்ட வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது. நாயுடுவுக்குப் பின் வரும் காலங்களில் முதல்வராகும் வாய்ப்பை பவன் இழந்துள்ளார். அதுமட்டுமல்ல, தன் கட்சியை வளர்க்க முடியாதவர், விஜய் கட்சிக்கு என்ன செய்து விட முடியும்? இந்த இணைப்பால் பாஜகவை பலன் அடையச் செய்ய வைப்பதே பவனின் நோக்கமாக இருக்கும்.”
