“அமைச்சரவை வாய்ப்பை பயன்படுத்தும் முடிவை விசிக எடுத்தால் தவறு கிடையாது” - பெ.சண்முகம்

“அமைச்சரவை வாய்ப்பை  பயன்படுத்தும் முடிவை விசிக எடுத்தால் தவறு கிடையாது” - பெ.சண்முகம்
Updated on
1 min read

சென்னை: “இடதுசாரிகள் எடுக்கும் நிலைப்பாட்டையே விசிக எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அமைச்சரவையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம் என விசிக முடிவு செய்தால் அது தவறான விஷயம் கிடையாது. அதிமுகவினர் அமைச்சரவையில் பங்கேற்றால் தவெக அரசுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய பெ.சண்முகம், “ தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என நாங்கள் சொன்னபோது, அது வதந்தி என பாஜக அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் எரிபொருள் விலைகளை இருமுறை உயர்த்தியுள்ளனர். விரைவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படும். அத்தியாவசியப் பொருட்களான எரிபொருளை குறைவான விலையில், தட்டுப்பாடு இன்றி கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக மிக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

இடதுசாரிகள், விசிக கட்சிகள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கவே முடிவெடுத்தோம். ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்ற யோசனை இருந்தால், அதுபற்றி விசிகவே முடிவு செய்யும். நிச்சயம் அவர்கள் எங்களுடன் கலந்து பேசுவார்கள். இடதுசாரிகள் எடுக்கும் நிலைப்பாட்டையே விசிக எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அமைச்சரவையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம் என விசிக முடிவு செய்தால் அது தவறான விஷயம் கிடையாது. அதிமுகவினர் அமைச்சரவையில் பங்கேற்றால் தவெக அரசுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்” என்று தெரிவித்தார்.

மு.வீரபாண்டியன் பேசுகையில், “தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் இடதுசாரிகள் மற்றும் விசிக ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்தும், மீண்டும் ஒரு தேர்தல் வரவேண்டாம், ஆளுநர் கையில் அதிகாரம் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். எங்கள் ஆதரவே அவர்களுக்கு போதும், வேறு சிந்தனைகள் தேவையில்லை. நாங்கள் வெளியிலிருந்தே ஆட்சியை ஆதரிக்கிறோம். நாங்கள் உழைக்கும் மக்கள், ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புவோம். அரசுக்கு வேறு எந்த குடைச்சலும் கொடுக்க மாட்டோம்” என்றார்.

“அமைச்சரவை வாய்ப்பை  பயன்படுத்தும் முடிவை விசிக எடுத்தால் தவறு கிடையாது” - பெ.சண்முகம்
“பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி குதிரை பேரத்தை எதிர்த்தே சி.வி.சண்முகம் எங்களிடம் வந்தார்” - ஆதவ் அர்ஜுனா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in