"தவெக - காங். கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டை தட்டி தூக்கிவிடலாம்" - காங். நிர்வாகி ஆவேசம்

"தவெக - காங். கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டை தட்டி தூக்கிவிடலாம்" - காங். நிர்வாகி ஆவேசம்
Updated on
1 min read

மதுரை: தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டை தட்டி தூக்கிவிடலாம் என்றும், திமுக ஆட்சியில் பங்கு தராவிட்டால் தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செயற்குழு கூட்டத்தில் பேசியவர்கள் ஆட்சியில் பங்குதாராவிட்டால் தவெக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என பேசினர்.

காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன் பேசுகையில், "ஊருக்கு ரெண்டு பேர வச்சு கட்சி நடத்துவதாக காங்கிரஸை திமுகவினர் கிண்டல் செய்கின்றனர். ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. திமுக மைனாரிட்டி அரசு நடத்திய போது காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரித்தது. அப்போது ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. இப்போது கேட்கிறோம். தர வேண்டும். தராவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

விஜய் தனித்து நின்றாலும் 30 சதவீத வாக்குகளைப் பெறுவார். அவருடன் காங்கிரஸ் சேர்ந்தால் தட்டித் தூக்கிவிடலாம். விஜய் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் பொன்னான எதிர்காலத்தை உருவாக்கலாம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வரும் ஸ்ரீதேவியை எட்டி உதைக்கக்கூடாது.

விஜய் காங்கிரஸை அழைக்கிறார். நமக்கு போகும் நினைப்பு இல்லைதான். ஆனால் திமுக வேண்டும் என்றே நம்மை தள்ளுகிறது. ஆட்சியில் பங்கு தாருங்கள் என மாணிக்கம் தாகூர் கேட்டால் அவருக்கு பதிலளிக்க முடியாது என்கிறார்கள்.

மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு இணையானவர். மத்திய அமைச்சர் முதல்வர் பதவிக்கு இணையானது. அவருக்கு பதிலளிக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என நாங்களும் ஆசைப்படுகிறோம். அதற்கு அவருக்கு நேரம் நல்லாயிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "காங்கிரஸ் கட்சியினர் தொகுதி வாரியாக பிஎல்ஏ2-க்களை நியமித்து வருகின்றனர். பிப். 25க்குள் பிஎல்ஏ2-க்கள் கூட்டம் நடத்தி காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டிக்கு ஆளில்லை என்று கூறுபவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்காரன் பணம் இல்லாமல் வேலை பார்ப்பான். அந்தக் கட்சியில் அப்படியில்லை. ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் வேலை பார்ப்பார்கள். தினமும் ரூ.1,000 சம்பளம் வழங்க வேண்டும்.

மதுரை வடக்கு தொகுதி (திமுக எம்எல்ஏ தளபதி தொகுதி) காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். வடக்கு தொகுதியை காங்கிரஸூக்கு வாங்கித்தருமாறு கார்கேயிடம் கூறிவிட்டேன். மதுரை வடக்கு தொகுதியே வாங்கியே தீருவோம். வெற்றிப்பெற்றே ஆக வேண்டும். அதற்காக முழுமையாக உழைப்போம்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in