

மேட்டூர்: “மீண்டும் மனிதனாக பிறந்தால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உருக்கமாக பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 இடங்களில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை சொல்லி கொண்டிருந்தார். அப்போது, மசூதியில் தொழுகை நடந்த நிலையில் சிறிது நேரம் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் தொடங்கினார்.
பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் எடுத்துகாட்டான தொகுதி நம்முடைய எடப்பாடி தொகுதி. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த அடையாளத்தை கொடுத்தீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். மீண்டும் மனிதனாக பிறந்தால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும்.
திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது. குடும்ப கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் முதலாளிகள் மாறி மாறி வருகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின் என உதயநிதி அடுத்தாக வருவதற்கு நினைக்கிறார். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழக மக்களுக்கும் நடக்கின்ற தேர்தல் இது.
விவசாயிகளை வஞ்சிக்கின்ற அரசாங்கம் திமுக. அரசு பள்ளிகளை கூடுதலாக திறந்தது அதிமுக. ஆனால், திமுக 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை முடியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய ஆட்சியை அவர் பார்க்க வேண்டும். என்னை பற்றி மிகவும் கேவலாக பேசுகின்றனர்.
இந்தியா, தமிழகத்தில் எத்தனை கட்சி இருந்தாலும் அதிமுகவின் இருபெரும் தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். கரோனா காலத்தில், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், தமிழகத்தில் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து மக்களை காப்பபாற்றியது அதிமுக. இதைவிட சிறந்த அரசை இந்தியாவில் பார்க்க முடியாது.
அதிமுக ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். நம்முடைய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து இருக்கிறார். திமுக ஆட்சியில் நடந்த திட்டங்கள், பணிகளை தாரளமாக சொல்லலாம். அதிமுக ஆட்சியில் நடந்த திட்டங்கள், நன்மைகளை பட்டியலிட்டு சொல்கிறோம்.
நீங்கள் சொல்லும் இடத்திற்கு வர தயார், 10 முறை சொல்லியும் பதில் இல்லை. ஸ்டாலினால் சொல்ல முடியாது, அவரது அப்பா பெயர் மற்றும் சிலை மட்டும் தான் வைத்துள்ளார். நெடுஞ்சாலை துறையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டது, உலக வங்கியில் பணமும் வழங்காத நிலையில் ஊழல் எப்படி நடந்து இருக்கும் என உச்சநீதிமன்றம் என்மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.