

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தாராபுரம்: இலவச திட்டங்களால் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகுமா என, தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, தாராபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தேர்தல் காலத்தில் வழங்கப்படும் இலவச வாக்குறுதிகளால் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கிறது.
இலவசப் பேருந்து திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான ஊதியம், பேருந்துகளைப் பராமரிக்கும் செலவு மற்றும் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நிதி ஆகியவை எங்கிருந்து பெறப்படுகின்றன? நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை அதிகரித்துவரும் சூழலில், இத்தகைய இலவசத் திட்டங்கள் தற்காலிகமானதாகவே இருக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால், அது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதே உண்மையான வளர்ச்சிக்கான வழியாகும். இலவச திட்டங்களால் வளர்ச்சி சாத்தியமாகுமா? நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் நஞ்சாவதும், பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கமும் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். வாக்கு அரசியலுக்காக இலவசங்களை அள்ளித்தருவதை விட்டுவிட்டு, மக்களுக்குத் தரமான கல்வி, வேலைவாய்ப்பு, சிறந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலைத் தருவதே நிலையான தீர்வாக அமையும். எனவே, உண்மையான மாற்றத்தை பெற வாக்கு பதிவின் போது ‘விசிலை விடு விவசாயியை தொடு’. தமிழகத்துக்கான புதிய மாற்றம் தாராபுரத்தில் இருந்து தொடங்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.