

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் திமுக வேட்பாளர் அங்காளனுக்கு எதிராக காங்கிரஸின் போட்டி வேட்பாளர் வேலு காங்கிரஸாருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரி: புதுவையில் இண்டியா கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு, மங்கலம், விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை ஆகிய 6 தொகுதிகளில் போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இண்டியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே எதிர்த்து அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவ்வாறு போட்டியிடுபவர்கள் காங்கிரஸ் கொடி, தலைவர்கள் படம் ஆகியவற்றுடன் நோட்டீஸ் விநியோகம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இது திமுகவினரை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
இந்நிலையில், ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் குமரனிடம், ‘‘மாநிலத் தலைவர் உத்தரவின் பேரில், நீங்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்குவீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘ராகுல் காந்திக்கு திருமணம் நடந்தால்தான், நான் வாபஸ் பெறுவேன்’’ என்று கிண்டலாக கூறி பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
அதேபோல் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தொடங்கி பலரும் திமுக தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றனர். இப்பிரச்சினையில் என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் திகைத்து நிற்கிறார்.