குன்னம் ராமச்சந்திரன்

குன்னம் ராமச்சந்திரன்

“திமுகவில் இணையமாட்டேன்; அரசியலில் இருந்தே விலகுகிறேன்” - வைத்திலிங்கம் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

Published on

பெரம்பலூர்: “என் குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன். இனி நான் எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. அரசியலில் இருந்தே விலகுகிறேன்” என குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குன்னம் ராமச்சந்திரன், “நேற்று வைத்திலிங்கத்துடன் சேர்ந்து திமுகவில் இணைவதாக முடிவெடுத்து அறிவித்தேன். இதனை தொடர்ந்து, திமுகவில் இணைவது குறித்து எனது குடும்பத்தினரிடம் கலந்து பேசினேன். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் என் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற போகிறாயா எனக் கேட்டார். ”அசிங்கமாக உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையாப்பா” என எனது மகள் கேட்டார். இதனால் கடும் வேதனையடைந்து இரவெல்லாம் உறக்கம் தொலைத்தேன்.

காலையில் எழுந்ததும் அரசியலே வேண்டாம் என அவர்களிடம் என் முடிவைச் சொன்னேன். என் குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன். எனது குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாகவும், என் உடல்நிலை குறித்த மருத்துவர்களின் ஆலோசனை காரணமாகவும் பொதுவாழ்விலிருந்து விலகிக்கொள்வது என்று நான் முடிவெடுத்துள்ளேன்.

நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறு என்றாலும், உடல்நிலை கருதியும், குடும்ப நிம்மதிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி நான் எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. வைத்திலிங்கம் மற்றும் கழக தொண்டர்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னோடு உறுதுணையாக இருந்து பயணித்தவர்கள் அவரவர் விரும்பும் கட்சியில் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான ஆர்.டி.ராமச்சந்திரன், 2016 - 21 வரை குன்னம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், பெரம்பலூர் மாவட்டக்கழக அதிமுக செயலாளராகவும் பதவி வகித்தவர். இவர் வைத்திலிங்கத்துடன் இணைந்து ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

<div class="paragraphs"><p>குன்னம் ராமச்சந்திரன்</p></div>
திமுகவில் சேர்ந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in