

சென்னை: “நான் தெளிவான ஒரு முடிவை எடுத்துதான் தவெகவில் இணைந்திருக்கிறேன். மற்றவருடைய கருத்துகளைக் கேட்டு, நான் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று செங்கோட்டையன் கூறினார்.
சென்னையில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நான் தெளிவான ஒரு முடிவை எடுத்துதான் தவெகவில் இணைந்திருக்கிறேன். மற்றவருடைய கருத்துகளைக் கேட்டு, நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. டெல்லியில் இருப்பவர்கள் சொல்லிதான் நான் தவெகவில் இணைந்திருக்கிறேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டபோது, நாங்கள் அந்த ஆட்சி முறையை பின்பற்றினோம். அதனால்தான் எம்ஜிஆர் இருக்கும் வரை மூன்று முறை, அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. ஜெயலலிதா ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். 2021-ம் ஆண்டு பழனிசாமிக்கு, மக்கள் என்ன பதில் கொடுத்திருக்கிறார்கள் என்பது அவருக்கே தெரியும்.
5 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அதன் பிறகு யாரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை, பழனிசாமியே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அன்று கூறியிருந்தேனே தவிர, யாருக்கும் கெடு விதிக்கவில்லை. கட்சிக்கு விரோதமாக நான் பல ஆண்டுகள் செயல்பட்டதாக பழனிசாமிக்கு வேண்டுமானால் அப்படி தோன்றியிருக்கலாம். எனக்கு அப்படித் தோன்றவில்லை.
ஒருவர் இயக்கத்தில் இருந்து பிரிந்த பிறகு, அவரைப் பற்றி பேசுவது சரியல்ல. அவர் அதை கடைபிடிக்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு காரணத்தைச் சொல்லி, என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பது, அவருடைய ஆசை. அந்த ஆசை கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. அது அவருக்கு வெற்றியாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை, எனது அரசியல் பயணம் தொடரும்.
நான் கோவை செல்லும்போது, நான் சென்ற விமானத்தில் பழுது ஏற்பட்டது. பெங்களூரு சென்று 2 மணி நேரம் தாமதமாக வந்த பிறகும் கூட, தொண்டர்கள் காத்திருந்து வரவேற்பளித்தார்கள். திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போதுகூட, கல்லூரி மாணவர்கள் பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என நன்றாகப் புரிகிறது” என்றார் செங்கோட்டையன்.