

கரூர்: “என் சுய விருப்பத்தால் தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெக அல்லது தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை” என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தவெகவில் சேர எனக்கு அக்கட்சியில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களிடம் இருந்தோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, சிவபதி போன்றோரிடம், கட்சிக்கு போன பின்பு எதுபோன்ற சூழல் உள்ளது என்று கேட்டேன். அதைத்தான் நான் பேட்டியில் சொன்னேன்.
தவெகவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளுக்கு இருந்தது. அதனால் தான் இன்று ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் என்னுடன் வந்து தவெகவில் இணைந்துள்ளனர். அவர்கள் சொன்ன கருத்தையே நான் சொன்னேன். அதை தவறுதலாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளனர்.
நிர்வாகிகளின் கருத்தை கேட்டு, எந்த அழுத்தமும் இல்லாமல் முடிவெடுத்து, பல கட்ட யோசனைக்கு பிறகு நான் தவெகவில் சேர்ந்தேன். இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவு. என் சுய விருப்பத்தால் தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெக அல்லது தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை. இது என் சுயமான முடிவு” என்றார்.