

ஓபிஎஸ்
தேனி: “அதிமுகவில் இணைய நான் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடந்த இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், “எந்த ஒரு முடிவும் ஏற்படாமல் வதந்தியை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் நிறுவனங்கள் செய்தியாக வெளியிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
ராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருப்பார்களா என்பதற்காகவே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். 12 நாட்கள் தான் எனது தேர்தல் பிரச்சாரம் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6 ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினார்கள். அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை மீட்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தி மீட்பது தான் எங்கள் நோக்கம்.
தேர்தலில் தனிக் கட்சி துவங்குவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டமாக போராடி வருகிறேன். தேவை இல்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா என இருவரை முதல்வராக ஆக்கியது இந்த தேனி மாவட்டம். கழகத்தை மீட்பதற்காகவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதே நோக்கம்” என்றார்
ஒன்றிணைய வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் கடம்பூர் ராஜூ நாங்கள் ஒன்றாக உள்ளோம், அவர் தான் தனியாக உள்ளார் எனக் கூறுகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உன்மையாகிவிடாது என்பதை கடம்பூர் ராஜூக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
என்டிஏ கூட்டணிக்கு நீங்கள் வருவதற்கு டிடிவி. தினகரன் ஆசைப்படுவதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “நட்பின் அடிப்படையில் அவர் கூறியுள்ளார். டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நிணைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியேரால் தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தயாரா” என முடித்தார்.