“அரசியலில் ஒவ்வொரு நாளும் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” - துரை வைகோ

துரை வைகோ | கோப்புப் படம்

துரை வைகோ | கோப்புப் படம்

Updated on
2 min read

சாத்தூர்: “அரசியல் என்றாலே எந்த பதவிக்கும் முதலீடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை. ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையை சேர்ந்த மதன்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி மியான்மர் நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவருக்கு அங்கு முறையான பணி வாய்ப்பு மற்றும் உணவின்றி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலறிந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியுறவு துறை அமைச்சகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மதன்ராஜ் மற்றும் அவருடன் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை பத்திரமாக நாடு திரும்பிவர உதவியுள்ளார்.

அதையடுத்து, சிப்பிப்பாறையில் இன்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எனக்கு அரசியலையும் பிடிக்காது, அரசியல்வாதிகளையும் பிடிக்காது. ஆனால், எனது கால சூழ்நிலையால் பிடிக்காத அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர் வைகோ மற்றும் மதிமுக இயக்கத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நான் அரசியலுக்கு வந்துள்ளேன். முக்கியமான தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் செயல்படுவேன் என கனவில் கூட நினைத்தது கிடையாது.

அரசியலில் நான் பயணத்தை ஆரம்பிக்கும்போது ஆதாயம் இல்லா மக்கள் பணி, சமரசம் இல்லா மக்கள் நலன் என்ற அடைமொழி எனக்கு இயற்கையாகவே வந்தது. இன்றைக்கு அரசியல் என்றாலே எந்த பதவிக்கும் முதலீடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது, எந்த சாதியை சேர்ந்தவர், எந்த மதத்தைச் சார்ந்தவர் அவர் எவ்வளவு பணம் கொண்டு வருவார், எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதுதான் இன்றைய அரசியலாக உள்ளது.

ஆனால், என்னைப் பொறுத்தவரை பொதுசேவை நிறைந்த வாழ்க்கைதான் பொதுவாழ்க்கை. அதுதான் அரசியல். பிடிக்காத அரசியலில் சிறப்பாக செயல்பட மக்கள் தரும் உத்வேகமே காரணம். அரசியலில் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும், இதில் கட்சி பார்க்கக் கூடாது. மதிமுக சரியில்லை என்றால் எங்களையும் விரட்டுங்கள். ஜாதி, மதத்தை கடந்து நல்லவர்களை தேர்வு செய்யுங்கள்.

நல்லகண்ணு போன்ற அற்புதமான மனிதர்களை காண முடியாது, வாழும் காந்தி நல்லகண்ணு மட்டுமே. நல்லக்கண்ணு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. சாதி, மதம், பணம் அவரை வெற்றிபெறச் செய்யவில்லை. நான் மதிக்கும் தலைவர்களில் முதலாவது நல்லகண்ணு அய்யாவைத்தான், அதற்கு அடுத்தபடியாகத்தான் தலைவர் வைகோ.

தாய்மார்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டால் அரசியலில் நல்லவர்களும் என்னைப் போன்ற இளைஞர்களும் லட்சக்கணக்கானோர் வருவார்கள். எப்போது அரசியலை விடுவேன் என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை. ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என கண்கலங்கி பேசினார்.

மேலும், “அந்த காலத்தில் வைகோ கூட்டத்தைக் காண விஜய்க்கு தற்போது வரும் இளைஞர் கூட்டத்தை விட 10 மடங்கு அதிகளவிலான இளைஞர்கள் கூட்டம் வந்தார்கள். ஆனால், அதில் தற்போது கால் சதவீதம் கூட யாரும் வருவது கிடையாது. மக்கள் மனதில் மாற்றம் வந்தால் அரசியல் கட்சிகளிலும், அரசியல் தலைமைகளிலும் மாற்றம் வரும் ” என்று பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைந்ததை மதிமுக முதன்மைச் செயலாளராக நான் வரவேற்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது சவாலான தேர்தல். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த இயக்கம் திமுக கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். மாநிலங்களவையில் நாங்கள் இடம் பெற விரும்பினால் தமுக தலைமையில் சொல்வோம், அதுகுறித்து திமுக மற்றும் மதிமுகவின் தலைமை சேர்ந்து முடிவு செய்வார்கள்.

சாதி, மதங்களைக் கடந்து மக்கள் சேவையை வைத்து பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். அரசியல் இயக்கங்களை கூட பார்க்க வேண்டாம்.

மணிசங்கர் அய்யரை பொறுத்தவரை ஒரு சர்ச்சைக்குரிய நபர். காங்கிரஸ் தலைமைக்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் காலாவதியானவர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்க மாட்டோம். திமுக கூட்டணியில் மதிமுக அதிக தொகுதிகளை கேட்கும். கிடைத்தால் சந்தோசம்தான்” என்று கூறினார்.

<div class="paragraphs"><p>துரை வைகோ | கோப்புப் படம்</p></div>
அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in