

விருத்தாசலம்: கடலூர் மாவட்ட கடலோரப் பகுதியான பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள நிலப் பரப்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடலுக்குள் 18 கிமீ தொலைவில் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடல்வளம் பாதிக்கப்படும் என சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சூழலியல் அமைப்புகளின் எதிர்ப்பு உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பது, அப்பகுதியில் மீண்டும் போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது.
இத்திட்டத்துக்கு கடலூர் சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் காண்காணிப்பு அமைப்பின் செயலாளர் அருள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தற்போது உலகளவில் அச்சுறுத்தலாக இருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளால் கடலோர சூழல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும், எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காகக் கடலின் அடிப்பகுதியை தோண்டும்போது, அங்குள்ள கடல் புற்கள் மற்றும் பவளப்பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இத்திட்டத்துக்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது. அதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு பரங்கிப்பேட்டை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கடலில் கிணறுகளை நிறுவ முற்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும். தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: வங்கக்கடலில் இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும்; மாங்குரோவ் காடுகளும் பாதிக்கப்படும். தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியும் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலை தான் இனியும் தொடர வேண்டும்.