‘தீபத் திருவிழா அன்று 3,000 பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசன சீட்டு’ - அமைச்சர் ரமேஷ்

‘தீபத் திருவிழா அன்று 3,000 பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசன சீட்டு’ - அமைச்சர் ரமேஷ்
Updated on: 
1 min read

சென்னை: திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமலா தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தீபத் திருவிழாவை முன்னிட்டு 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமல் தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு புதிய முன்னெடுப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பொதுமக்களுக்கும் தீபத் திருவிழாவின்போது சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் 1,500 அனுமதிச் சீட்டுகள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதம் 1,500 சீட்டுகள் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அனுமதிச் சீட்டுகளுக்கு பக்தர்கள் கணினி வாயிலாக குலுக்கள் முறையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள பக்தர்களுக்கு அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணையவழி அனுமதிச் சீட்டுக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான்று உரிய வழிமுறைகளின்படி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திடலாம். உள்ளூர் பொதுமக்களுக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றியும் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை நவ.18 அன்று திருவண்ணாமலை ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிரிவலப் பாதைகளில் பக்தர்கள் எவ்வித சிரமங்கள் இல்லாத வகையில் கிரிவலம் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ரமேஷ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தீபத் திருவிழா அன்று 3,000 பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசன சீட்டு’ - அமைச்சர் ரமேஷ்
‘அரசு கடனை குறைத்துக் காட்ட நெல் கொள்முதல் நிறுவனத்தை மாற்றுவதா?’ - அன்புமணி கண்டனம்

X