

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வருபவர்கள் எப்படி சட்டத்தைப் பாதுகாப்பார்கள்? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் ராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு பல லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்த அனீஸ், பெண் வழக்கறிஞரிடம் பணம் கேட்டு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் உள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.15 லட்சம் வேண்டும் என்றும், பெண் வழக்கறிஞர் என்பதால் இரண்டு லட்சமாக குறைத்து கொடுத்தால் போதும் எனப் பேரம் பேசுகிறார்.
இதேபோல் வழக்கறிஞர் அகஸ்டின் என்பவரிடமும் பேரம் பேசியதாக அந்த ஆடியோவில் உள்ளது. அந்த அகஸ்டின் தற்போது அரசு வழக்கறிஞராக உள்ளார். இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சை எழுந்ததால் அனீஸ் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம் பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரித் சபரி ஆஜராகி, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அப்போது நீதிபதி, அரசு வழக்கறிஞர் பதவியை யார் விற்பனை செய்தது? எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதி, அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம் பெறப்பட்டது என்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரை ஏன் விசாரிக்கவில்லை. புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா? லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரண்டு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவர்கள் எல்லாம் நாட்டைக் காப்பாற்றுவார்களா? சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த மனு முடிக்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்.