

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து, மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், பூர்ணசந்திரன் ஆன்மா நற்கதி அடைய வேண்டி, தமிழகம் முழுவதும் மோட்ச தீபம் ஏற்றப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்திருந்தது.
இதன்படி, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள விநாயகர் கோயிலில், இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மோட்ச தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என்று கூறி, போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீஸார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி அமைப்பினர் சிலர் காயமடைந்தனர். பின்னர் அனைவரையும் கைது செய்த போலீஸார், அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல, திருவள்ளூரில் இந்து முன்னணி மேற்கு மாவட்டத் தலைவர் வினோத் கண்ணா, நிர்வாகிகள் ரகுநாதன், செல்வமணி, புரு ஷோத்தமன் உள்ளிட்டோர் மோட்ச தீபம் ஏற்றத் திரண்டனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீஸார் அனைவரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.