

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை மனு அளித்தார். உடன், தென்பாரத அமைப்பாளர் பக்தன்ஜி, மாநில அமைப்பாளர் ராஜேஷ், பொதுச்செயலாளர் கிஷோர்குமார், செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன்.
சென்னை: இந்து சமய அறநிலையத் துறைசட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்து முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்.17-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் ஒரு மசோதா (எண்:40/2025) நிறைவேற்றப்பட்டது.
‘கோயிலுக்குச் சொந்தமான, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் நிதியில் கல்வி நிறுவனங்கள், இசைப் பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா தமிழகத்தில் உள்ள கோயில்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் உள் நோக்கம் கொண்டது. இதனால், மேலும் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோயில் நிதியில் ஊழல் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த கருத்துகளையும் ஆளுநரிடம் இந்து முன்னணியினர் தெரிவித்தனர். ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதித் துறையை தமிழக அரசு மதிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணான நீதித் துறையை இழிவுபடுத்தும் நோக்கில் அரசு செயல்படுவது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை சீர்குலைப்பதாகும். இதனால், சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். இது மிகுந்த கவலையளிப்பதாகும்’ என்று ஆளுநரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன்ஜி, மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநிலச் செயலாளர் சேவுகன் ஆகியோர் உடன் இருந்தனர்.